டைனோசர் என்றாலே நாம் திரைப்படங்களில் பார்த்தது போல் ஒரு பிரம்மாண்ட உருவமும், அதன் கோரைப் பற்களும் மனதுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இந்த டைனோசர்கள் இந்தியாவிலும் இருந்தது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
டைனோசர் என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம்தான். அந்தத் திரைப்படத்தில்தான் டைனோசர் என்ற ஒரு வகை விலங்கைப் பற்றி உலகம் முழுவதும் தெரிந்து கொண்டது. அகழ்வாராய்ச்சியில் உலகின் பல இடங்களில் கிடைத்த டைனோசர்களின் படிமங்களை வைத்தே இந்தத் திரைப்படத்தில் டைனோசர்களை வடிவமைத்தனர். இதுவரை உலகின் பல இடங்களில் டைனோசர்கள் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் டைனோசர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்திய புவியியல் ஆய்வு மையமும் ஐஐடி ரூகியும் இணைந்து நடத்திய அகழாய்வில், மிக நீண்ட கழுத்துடைய தாவரங்களை உண்ணும் டைனோசரின் புதைப்படிவங்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் டைனோசர் படிமமாகும். ‘சயின்டிபிக் ரிப்போர்ட்’ எனப்படும் சர்வதேச பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில், இந்தப் புதிய படிமங்கள் 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், இதுவரை உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்படாத புதிய இனத்தைச் சேர்ந்தது இது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் டைனோசர்கள் கூட்டமாக வாழ்ந்ததற்கான அடையாளங்களும் இருக்கின்றன. இந்தப் புதிய வகை டைனோசர் இனத்துக்கு, இது கண்டுபிடிக்கப்பட்ட ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தை அடிப்படையாகக் கொண்டு, 'தாரோசாரஸ் இண்டிகஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு இந்திய புவியியல் ஆய்வு மையம் திட்டமிட்டதையடுத்து, இந்தப் புதிய வகை டைனோசர் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 164 மில்லியன் ஆண்டுகள் பழைமையான புதைப்படிமம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே பழைமையான புதைப்படிமம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் 167 மில்லியன் ஆண்டுகள் பழைமையான டைனோசர் படிவம் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.