எந்த வாகனத்தையும் தன்னுள் அனுமதிக்காத மலைவாசஸ்தலம்!

Matheran hill station
Matheran hill station
Published on

பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் முதலான மலைவாசஸ்தலங்களுக்கு நாம் பேருந்து அல்லது காரில் செல்லுகிறோம். நமது வாகனங்களிலேயே அங்குள்ள சுற்றுலாப் பகுதிகள் முழுவதையும் சுற்றி வருகிறோம். ஆனால், பேருந்து, கார் போன்ற எந்த ஒரு வாகனமும் ஒரு மலைவாசஸ்தலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. மலைவாசஸ்தலத்தின் சுற்றுச்சூழலை பசுமையாகப் பராமரித்துக் காப்பாற்றவும் மாசுகளற்ற பகுதியாகப் பராமரிக்கவும் ஒரு மலைவாசஸ்தலம் வாகனங்களை அனுமதிப்பதில்லை. அந்த சுற்றுலா தலம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

மாதேரன் (Matheran) மலையானது மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,625 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மும்பையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைவாசஸ்தலம் மாதேரன். மராத்தி மொழியில் மாதேரன் என்றால் ‘மலைகளின் நெற்றியில் உள்ள காடு’ என்று பொருள். இந்த மலைவாசஸ்தலத்தின் சுற்றுச்சூழலை புகை மாசிலிருந்து காப்பதற்காக இங்கு வானங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆசியாவிலேயே வாகனங்கள் அனுமதிக்கப்படாத ஒரே மலைவாசஸ்தலம் மாதேரன் மட்டுமே.

மாதேரன் சுற்றுலாப் பகுதிகளை குதிரை சவாரி மூலமாகச் சுற்றிப் பார்க்கலாம். மேலும், கையால் இழுக்கப்படும் வண்டிகள் இங்கு பயன்பாட்டில் உள்ளன. இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மலைவாசஸ்தலத்தை நடந்தே சென்று பார்த்து அனுபவிப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. மாதேரன் கோடைக்காலத்தில் ஓய்வெடுக்க ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மலைவாசஸ்தலமாகும். மாதேரனில் சுற்றிப் பார்த்து மனத்தை புத்துணர்ச்சி பெறச் செய்ய ஏராளமான இடங்கள் இங்கு உள்ளன.

மாதேரன் மலையானது 1850ம் ஆண்டில் ராய்காட் மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஹக் பாய்ண்ட்ஸ் மாலெட் என்பவரால் கண்டறியப்பட்டது. லார்ட் எல்பின்ஸ்டன் என்பவர் மாதேரன் மலைவாசஸ்தலத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து கோடைக் காலத்தில் ஆங்கிலேயே அதிகாரிகள் ஓய்வெடுக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது.

Matheran hill station
Matheran hill station

மாதேரன் மலையில் மலையேற்றம் செய்து மகிழலாம். இம்மலைத்தொடரில் இருபத்தி எட்டு மலையேற்றப் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், இங்கு இரண்டு ஏரிகள், இரண்டு பூங்காக்கள் அமைந்துள்ளன. ராஜா ஜார்ஜ் காட்சி முனை (King George View Point) ஒரு சுற்றுலா பகுதியாகும். இங்கிருந்து மாதேரன் மலையின் இயற்கை அழகை நாம் ரசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!
Matheran hill station

மாதேரன் மலையில் அம்பேத்வாடி என்ற பகுதியில் மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. இந்த மலைவாசஸ்தலத்தில் ஒன் ட்ரீ ஹில் எனும் பெயரில் குறிப்பிடும் ஒரு மலை உள்ளது. இந்த மலைப் பகுதியை நாம் மலையின் அடிவாரத்தில் இருந்து பார்க்க முடியாது. நாம் மலை மீது ஏறித்தான் இம்மலைப்பகுதியை நம்மால் பார்க்க இயலும். இம்மலையின் உச்சியில் ஒற்றை மரம் ஒன்று காணப்படுகிறது. இதன் காரணமாகவே இப்பகுதி ‘ஒன் ட்ரீ ஹில்’ என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் நின்று நாம் இம்மலையின் முழு பகுதியையும் கண்டு ரசிக்க இயலும். இப்பகுதியை ஏறி அடைய நமக்கு சுமார் மூன்றரை மணி நேரம் தேவைப்படும். மாதேரன் மலையிலிருந்து நாம் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் முழுமையாகக் கண்டு ரசிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான நெரால் (Neral) என்ற இடத்தில் இருந்து மாதேரன் வரை மலையில் இருபது கிலோ மீட்டர் தொலைவிற்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரயிலைப் போல ஒரு நேரோகேஜ் ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணித்து மாதேரனை அடைவது சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும். இந்த சிறிய வகை ரயிலானது செங்குத்தான மலையை ஏறிக் கடந்து மாதேரனை அடைய சுமார் இரண்டு மணி நேரமாகும்.

மாதேரன் மலையானது மும்பையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் புனேவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மும்பை அல்லது புனே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் மாதேரன் மலைவாசத்தலத்திற்குச் சென்று இயற்கையை அனுபவித்துவிட்டு வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com