மரத்திலே தொங்கும் விவசாயிகளின் வீடு!

Wooden Tree
Wooden Tree
Published on

கால மாற்றத்திற்கு ஏற்ப வீடுகளும் நவீனமாக மாறி வரும் இன்றைய நிலையில், மரத்திலேயே வீடு கட்டி வசித்து வரும் விவசாயிகளைப் பற்றி அறிந்தால் நிச்சயமாக நமக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும். ஆம், இந்த மர வீடுகள் திருப்பூர் மாவட்டதில் தான் இருக்கிறதாம். வாங்க இந்த மர வீடுகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.

பணி நிமித்தமாக எங்கு சென்றாலும் இறுதியாக நாம் திரும்பி வருவது வீட்டிற்கு தான். அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை நமக்கு பிடித்தவாறு கட்டி வாழ்வோம். பறவைகள் கூட தனக்கென ஒரு கூடு கட்டி வாழும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. நமது இருப்பிடத்தைப் பொறுத்து இயற்கைச் சீற்றங்கள் மற்றும் வனவிலங்குகளால் நமது வீடுகளுக்கு சில நேரங்களில் ஆபத்துகள் ஏற்படலாம். இப்படி தன்னுடைய வீட்டிற்கு வனவிலங்குகளால் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து, மரத்தில் வீட்டை அமைத்துள்ளனர் விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைக்கு அருகே ஆனைமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இதற்கு அருகில் இருக்கும் கொழுமம் வனச்சரகம், ஆண்டிபட்டி ராயர்பாளையம் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பெரும்பாலும் தென்னை மரங்கள் சேதமடைகின்றன. வனவிலங்குகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விவசாயிகள் கட்டிய வீடு தான் செம ஹைலைட்.

மரத்திலான வீட்டை மரத்திலேயே கட்டி பசுமை விவசாயிகள் என்பதை இங்குள்ளவர்கள் நிரூபித்து விட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் கட்டியிருப்பது ஈரடுக்கு வீடு. மரத்தின் மீது மரக்கட்டைகளால் வீட்டைக் கட்டி, படிக்கட்டு அமைத்து, பனையோலையால் கூரை அமைத்து ஈரடுக்கு மர வீட்டை 5 பேர் வசிக்குமளவிற்கு அமைத்துள்ளனர்.

மரத்தில் வீடு கட்டுவதே சவாலான விஷயம். அதிலும் ஈரடுக்கு வீட்டை கட்டி புதுமையான ஐடியாவையும், திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் விவசாயிகள். இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் பூர்வகுடிகளாக பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் மானாவாரி பயிர்களான சோளம், கொள்ளு மற்றும் மொச்சை போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். மலைப் பகுதிகளில் இருந்து தண்ணீரைக் குடிக்க வருகின்ற யானைகள் தென்னை மரங்களை அடியோடு சாய்த்து சேதப்படுத்தி விடுகின்றன. ஆனால் வேறு எந்த மரங்களையும் இவை சேதப்படுத்துவதில்லை.

இதையும் படியுங்கள்:
நிலச்சரிவைத் தடுக்க எந்த மரங்களை வளர்க்க வேண்டும்?
Wooden Tree

குடும்பத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இங்கிருக்கும் விவசாயிகள் மரக்குச்சிகளைப் பயன்படுத்தி, உயரமாக வளர்ந்த வேம்பு மரத்தில் உறுதியான வீட்டைக் கட்டியுள்ளனர். மரத்தின் கிளைகளைக் கொண்டே மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்றை நன்றாக இறுக்கிக் கட்டி பசுமையான மர வீடு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாதாரணமாக வீட்டில் ஏறி இறங்கும் படி உறுதியுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மர வீட்டின் கீழ் அடுக்கில் சமையல் அறையும், மேல் அடுக்கில் படுக்கை அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பல விவசாயிகள் இதே மாதிரி தான் மர வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர். மரத்தில் வீடு கட்டுவதன் மூலம் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது மட்டுமின்றி, கோடை வெயில் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் தப்பிக்க முடியும்.

இன்றைய நவீன யுகத்திலும், மரத்திலேயே வீடு கட்டி வாழும் விவசாயிகள் இருப்பதை அறியும் போது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com