

கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஒரு சிறிய வண்டு ஒன்று சுமார் 15 கோடிக்கும் அதிகமான மரங்களைச் சாம்பலாகிப் போகச் செய்துள்ளது. இந்த அழிவைத் தடுக்க வேறு வழியே இல்லாமல், அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு துணிச்சலான, முடிவை கையில் எடுத்துள்ளனர். அதுதான் காடுகளுக்குள் லட்சக்கணக்கான குளவிகளைத் திறந்துவிடுவது!
கிழக்கு ஆசியாவிலிருந்து சரக்குக் கப்பல்களில் வந்த மரப்பலகைகள் மற்றும் பெட்டிகள் மூலம், 'எமரால்டு ஆஷ் வண்டு' (Emerald Ash Beetle) அமெரிக்காவிற்குள் நுழைந்தது. 2002-ஆம் ஆண்டு டெட்ராய்ட் நகரில் ஆஷ் வகை மரங்கள் கொத்துக்கொத்தாக சாவதை கவனித்தபோதுதான் இந்த விபரீதம் வெளியே தெரிந்தது.
தன் சொந்த ஊரான ஆசியாவில் இந்த வண்டுகளால் மரங்களுக்குப் பெரிய பாதிப்பில்லை, காரணம் அங்குள்ள மரங்களுக்குப் பரிணாம வளர்ச்சியில் எதிர்ப்பு சக்தி உண்டு. ஆனால், அமெரிக்க மரங்களுக்கு இந்த எதிரியை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.
இந்த வண்டின் லார்வாக்கள், மரத்தின் பட்டைகளுக்கு அடியில் புகுந்து, மரத்தை உள்ளிருந்தே அரித்து, சத்துக்கள் செல்லும் பாதையை அடைத்துவிடுகின்றன. இதனால், ஆரோக்கியமான மரம் கூட 2 முதல் 3 ஆண்டுகளில் பட்டுப்போய்விடும். 2025-க்குள் இந்த வண்டு அமெரிக்காவின் 36 மாநிலங்களுக்கும், கனடாவின் 5 மாகாணங்களுக்கும் பரவிவிட்டது.
ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி எரித்தல், மரக்கட்டைகளை ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு எடுத்துச் செல்லத் தடை, பூச்சிக்கொல்லி மருந்துகள் என எத்தனையோ முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், நகரங்களில் உள்ள தனிப்பட்ட மரங்களை மட்டுமே அதிக செலவு செய்து காப்பாற்ற முடிந்தது. பரந்து விரிந்த காடுகளில் இருக்கும் கோடிக்கணக்கான மரங்களுக்கு மருந்து அடிப்பது சாத்தியமற்றது என்பதால், இந்த வண்டுகளின் பரவலைத் தடுக்க முடியவில்லை.
ரஷ்யாவிலிருந்து வந்த ரட்சகன்!
முள்ளை முள்ளால் எடுப்பது போல, இந்த வண்டை அழிக்க அதன் இயற்கை எதிரியைத் தேடி ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதிக்குச் சென்றனர் விஞ்ஞானிகள். அங்குள்ள ஒரு வகை ஒட்டுண்ணிக் குளவிகள், இந்த வண்டுகளின் லார்வாக்களைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பதைக் கண்டறிந்தனர்.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, லட்சக்கணக்கான இந்த ரஷ்ய குளவிகளை அமெரிக்கக் காடுகளில் விடுவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இது ஒரு சூதாட்டம் போன்றதுதான். ஏனெனில், அறிமுகப்படுத்தப்படும் புதிய இனம், நாளை அங்கிருக்கும் உள்ளூர் உயிரினங்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது என்ற அச்சம் இருந்தது.
ஐந்து ஆண்டுகால கள ஆய்விற்குப் பிறகு, இந்தத் திட்டம் ஓரளவுக்குப் பலன் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. குளவிகள் விடப்பட்ட இடங்களில், வண்டுகளின் இனப்பெருக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. சூழலுக்கு ஏற்ப 20 முதல் 50 சதவீதம் வரை இந்த வண்டுகளின் லார்வாக்களைக் குளவிகள் அழித்துள்ளன. இது வண்டுகளை முழுமையாக அழிக்காது என்றாலும், மரங்கள் மொத்தமாக அழிவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்தக் குளவிகள் மற்ற உள்ளூர் பூச்சிகளைத் தாக்கியதாகத் தெரியவில்லை.