African Lungfish: 4 ஆண்டுகள் வரை உணவில்லாமல் வாழக்கூடிய அதிசய மீன்!

African Lungfish
African Lungfish
Published on

ஆப்பிரிக்கன் லங் பிஷ், அறிவியல் ரீதியாக Protopterus Accentens என அழைக்கப்படும் இந்த வகை மீன்கள், ஆப்பிரிக்காவின் நன்னீர் ஆறுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வசிக்கும் ஒரு வித்தியாசமான உயிரினமாகும். நுரையீரல் மீன் என்ற பெயரிலிருந்தே அதன் சுவாசிக்கும் திறனை நீங்கள் அறியலாம். அதாவது கிட்டத்தட்ட 90 சதவீத ஆக்சிஜனை இந்த மீன்கள் காற்றிலிருந்தே பெறுகிறது. இதன் காரணமாகவே வறண்ட காலங்களிலும் இந்த மீனால் உயிர்வாழ முடிகிறது. 

ஆப்பிரிக்க நுரையீரல் மீன் ஒரு பழங்கால இனமாகும். இது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பெரிய அளவில் எந்த உருமாற்றமும் இன்றி பூமியில் வாழ்கிறது. பார்ப்பதற்கு ஈல் போன்ற உடலமைப்பைக் கொண்ட இந்த மீன்கள், சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. இதன் உடல் அடர்த்தியான, மெலிதான செதில்களால் மூடப்பட்டிருப்பதால், நீரிழப்பு காலங்களில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. 

காற்றை சுவாசிக்கும்: இந்த மீனின் தனித்துவமான அம்சங்களில் காற்றை சுவாசிக்கும் திறன் உள்ளது. மற்ற மீன்களில் இல்லாத சிறப்பு வாய்ந்த நுரையீரல் உறுப்பு இவற்றிற்கு இருப்பதால், காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்க முடிகிறது. எனவே இந்த மீன்களால் ஆக்சிஜன் குறைந்த நீர் நிலைகளிலும் உயிர்வாழ முடியும். 

இவை வாழும் இடத்தில் நீரின் அளவு குறையும்போது, சேற்றுக்குள் சென்று புதைந்து, ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. கடுமையான வறட்சி காலங்களில், தனது உடலில் இருந்து சுரக்கும் சளி போன்ற திரவத்தைப் பயன்படுத்தி, தன்னை சுற்றி கூடு போல அமைத்து, பல மாதங்கள், சில ஆண்டுகள் கூட இவற்றால் செயலற்ற நிலையில் இருக்க முடியும். 

உணவே வேண்டாம்: இதுபோன்ற தருணங்களில் ஆப்பிரிக்க நுரையீரல் மீன்களின் வளர்ச்சிதை மாற்றம் கணிசமாகக் குறைந்து, அதன் ஆற்றல் பாதுகாக்கப்பட்டு, நீரிழப்பு குறைகிறது. தன் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புகளைப் பயன்படுத்தி, இந்த மீன்களால் சுமார் 4 ஆண்டுகள் வரை உணவில்லாமல் இருக்க முடியும். ஆனால் வரட்சி காலம் சில மாதங்களிலேயே முடிந்து மழை மீண்டும் பெய்துவிடும் என்பதால், இவை அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நீர் நிலைகளில் தண்ணீர் வந்ததும், அதன் கூடு போன்ற அமைப்பிலிருந்து வெளியேறி, இயல்பான செயல்களை மீண்டும் தொடங்கும். 

இப்படி அசாத்திய ஆற்றல் கொண்ட உயிரினங்களும் உலகில் இருக்கிறது என்பதை நினைக்கும்போது, உண்மையிலேயே வியப்பாக உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com