

பறவை மற்றும் விலங்கினங்களில் ஆண் இனம் தம் குஞ்சுகள் மற்றும் குட்டிகளிடம் அன்பாகவும் பாசத்தோடும் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். சமீபத்தில் தவளை இனங்களில் ஒரு வகையான ராணிட்டோமேயா ஹ்வாட்டா (Ranitomeya Hwata) என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தவளை உருவத்தில் சிறியது. தனது சந்ததியை உருவாக்கி வளர்ப்பதில் இந்த ஆண் தவளையின் பங்கு அளப்பறியது.
தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மழைக் காடுகளில் வசிக்கும் ஹ்வாட்டாவின் மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி மிகப் பெரியது. மற்ற தவளைகள் போலின்றி, முட்டைக்குள்ளிருக்கும் தனது குட்டியின் நலனை மிகுந்த அக்கறையுடன் கவனித்துப் பராமரிக்கும் ரீதியில், முட்டைகளை கண்காணிப்பதில் ஆண் ஹ்வாட்டாவிற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை எனலாம்.
பெண் தவளை முட்டைகளை ஓர் இலை மீது இட்டுவிட்டுச் சென்றுவிடும். இலை மீது இறுக ஒட்டிக் கொண்டிருக்கும் முட்டைகளை நீர்ச்சத்து குறையாமலும், எதிரிகளிடமிருந்தும், எதிர்மறை சக்தியுடன் செயல்படும் சுற்றுச்சூழலிலிருந்தும் பாதுகாக்க மிகுந்த உதவியாயிருப்பது ஆண் ஹ்வாட்டா தவளைகள்தான்.
சில நேரம் பெண் தவளையை அழைத்து மூங்கில் மரத்தின் குழல் போன்ற தண்டுகளுக்குள் நிறைந்திருக்கும் நீரில் முட்டையிட வைக்கவும் உதவுகிறது ஆண் தவளை. முட்டையிலிருந்து குஞ்சு வந்த பிறகு அதற்கு உணவு ஊட்டி வளர்ப்பதும் அப்பா தவளையே. அது காட்டும் அளவற்ற அக்கறையினாலேயே அதன் சந்ததி பரிணாம நன்மை பெற்று பெருகி வளர்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இந்த இனத்தின் கவர்ச்சிகரமான நிறமானது, எதிரிகளுக்கு இதன் விஷத் தன்மையை புலப்படுத்தி, அவற்றிடமிருந்து தன்னையும் குட்டிகளையும் காத்துக்கொள்ள உதவுகிறது. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளை இனத்தில் ஹ்வாட்டா வகை பெற்றோர் பராமரிப்பு (parenting) தனித்துவமானது.
மழைக் காடுகளை அழிப்பது இந்த வகை தவளைகளின் வாழ்வாதாரத்தைக் குலைப்பதாக உள்ளது. வித்தியாசமான குண நலன் கொண்ட ஹ்வாட்டா தவளைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.