வியப்பில் ஆழ்த்தும் ஆந்தையின் குணங்கள்!

Amazing owl.
Amazing owl.

லகின் பல பெருநகரங்களில் பொழுது சாய்ந்த பின்பும் நகரங்கள் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். உற்சாகம், கொண்டாட்டம் என பல நிலைகளைக் கொண்ட இரவு வாழ்க்கை வாழும் மனிதர்களை நாம் பார்த்திருப்போம். இத்தகைய மனிதர்கள் போலவே ஆந்தை உள்ளிட்ட சில உயிரினங்கள் இரவு வாழ்க்கையை வாழ்கின்றன. 

சில உயிரினங்கள் சூரியன் அஸ்தமனம் ஆகி, இருள் சூழ்ந்ததும் தங்களின் தினசரி வாழ்க்கையைத் தொடங்குகின்றன. இத்தகைய வாழ்க்கை முறையை மனித வசிப்பிடங்களுக்கு மிக அருகிலேயே பல காலமாக வாழ்ந்து வரும் பறவை இனங்களில் ஒன்றுதான் ஆந்தை. என்னதான் அவை நமக்கு அருகிலேயே வசித்து வந்தாலும், அவற்றைப் பற்றிய தவறான புரிதலே மக்கள் மத்தியில் இன்னமும் இருந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அவை இரவில் மட்டுமே செயல்படும் என்பதுதான். மேலும், இந்த ஆந்தைகளைச் சுற்றி பல அச்சங்களும், மூடநம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன. ஆந்தையின் தோற்றத்தை வைத்து அவற்றைப் பற்றிய தவறான விஷயங்கள் பரப்பப்படுவதைக் காண முடிகிறது. மேலும், ஆந்தையைப் பார்த்தாலோ அவற்றின் சத்தத்தைக் கேட்டாலோ அபசகுணம் என்று சொல்பவரும் உள்ளனர்.

ஆந்தைகளை பலி கொடுத்தால் புதையல் கிடைக்கும், அதிக செல்வம் கிடைக்கும் என்பது போன்ற சில மூடநம்பிக்கைகளால், ஆந்தைகள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. ஆந்தைகள் மட்டுமின்றி, தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்களின் இத்தகைய நிலைக்கு மக்களின் மூடநம்பிக்கையே காரணமாக உள்ளது. ஆனால், உண்மையிலேயே ஆந்தைகள் விவசாயிகளின் நண்பன்.

இந்த உலகில் மொத்தம் 200க்கும் அதிகமான ஆந்தை இனங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 33 வகையும், குறிப்பாக தமிழகத்தில் 15 வகையான ஆந்தை இனங்கள் இருக்கின்றன. ஆந்தைகளின் வாழ்க்கைமுறை குறித்து பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கியமான கருத்து ஆந்தைகளுக்கு பகலில் கண் தெரியாது என்பது. ஆந்தையின் கண் பகுதி அதன் தலையில் சுமார் 25 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் துல்லியமாக அதனால் பார்க்க முடியும்.

ஆந்தைகளால் தன்னுடைய கழுத்தை 270 டிகிரி கோணத்தில் சுழற்ற முடியும். இது தவிர, அதன் செவிப்புலனும் மிகத் துல்லியமாக இருக்கும். மேலும், எவ்வித ஓசையும் இல்லாமல் அவற்றால் பறக்க முடியும். இத்தகைய சிறப்புகளால் உணவுச் சங்கிலியில் அவை முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை கொன்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆந்தைகளின் விருப்ப உணவாக எலிகள் இருப்பதால், விவசாயத்தை அழிக்கும் எலிகள் இதனால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சில ஆய்வுகளின் மூலம் ஆந்தைகள் ஒரு நாளில் 4 - 6 எலிகள் வரை வேட்டையாடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி விவசாயத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் எலிகளை அதிகப்படியாக ஆந்தைகள் அழிப்பதால், ‘ஆந்தைகள் விவசாயிகளின் நண்பன்’ என்று சொல்வதில் மிகையில்லைதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com