என்னையா தூங்குமூஞ்சி மரம்னு சொல்றீங்க?

Samanea saman
Samanea saman
Published on

மனித வாழ்வில் முக்கிய அங்கமாக வகிப்பது மரங்கள். சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவது இந்த மரங்கள் தான். ஒரு சில மரங்களை நாம் அடிக்கடி பார்த்தாலும், அதன் பெயர் மற்றும் பயன்கள் பற்றி சிந்தித்தால் பலருக்கும் பல விஷயங்கள் தெரியாது. இதில் பலருக்கும் தெரிந்த, ஒரு சிலருக்கு தெரியாத மரம் தூங்குமூஞ்சி மரம். ஆனால் இதன் பயன் தெரியாமல் காலங்காலமாக இதை தூங்குமூஞ்சி மரம் என்று கூறி வருகிறோம்.

அப்படியானால் இந்த தூங்குமூஞ்சி மரத்தின் உண்மையான பெயர் என்ன என்பதை பற்றியும், மேலும் இந்த மரத்தின் பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும் காண்போம்.

பண்ணி வாகை:

தூங்குமூஞ்சி மரத்தின் உண்மையான பெயர் பண்ணி வாகை (Samanea saman). இந்த மரம் வெப்ப மண்டல மரமாகும். அதிகபட்சமாக 25 மீட்டர் உயரமும், 40 மீட்டர் சுற்றளவும் வளரக்கூடியது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.

வாகை மரம் மற்றும் தூங்குமூஞ்சி மரம்: 

தூங்குமூஞ்சி மரமும், வாகை மரமும் ஒன்றல்ல. இரண்டு வெவ்வேறு மரங்கள். தூங்குமூஞ்சி மரம் பண்ணி வாகை மரம் Samanea saman என்று அழைக்கப்படுகிறது. வாகை மரம் Albizia lebbeck  என்று அழைக்கப்படுகிறது. ஆனால் பார்பதற்கு ஒரே மாதிரியாக தெரியும். மேலும் இரு மர பூக்களின் நிறங்கள் வேறு.

பண்ணி வாகை மரத்தின் பூக்கள் நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு மகரந்தங்கள் கொண்ட இளஞ்சிவப்பு நிறமாகும். வாகை மரத்தின் பூக்கள் வெள்ளை நிறமாகும்.

பண்ணி வாகை மரத்தின் பயன்கள்:

இந்த மரம் பகல் வேளையில் நன்றாக இலைகள் விரித்து காட்சியளிக்கும். ஆனால் சூரிய ஒளி இல்லாத நேரத்தில், மாலை பொழுதில் இலைகளை மூடியவாறு கீழ் நோக்கி சாய்ந்து விடும். இதனால் தான் இதை தூங்குமூஞ்சி மரம் என்று கூறுகிறார்கள். 

இந்த மரத்திற்கு மழை மரம் (Raintree) என்று மற்றொரு பெயர் உண்டு. காரணம் மழை பெய்து ஓய்ந்த பிறகு, இந்த மரத்தின் அடியில் நின்றால் சிறிது நேரம் வரை மடிந்த இலைகளின் வழியே மழை தூரல் விழும். மற்றொரு காரணமாக இந்த மரத்தில் உள்ள பூக்களில் வண்டுகள் தேன் எடுக்கும் போது தேன் துளிகள், மழை துளிகள் போல கீழே விழுவதால் மழை மரம் என்று அழைப்படுகிறது.

இந்த மரம் நிழலுக்கு ஏற்ற மரமாகும். பெரிய மரமாக வளரும் பண்ணி வாகை ஒரு பெரிய குடை போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும். எனவே இந்த மரம் நெடுஞ்சாலையின் ஓரங்களில் நிழலுக்கு ஏற்ற மரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண் கழுதைப் புலிகள் படும் பிரசவ வேதனை - நினைத்துப் பார்க்க முடியாத துயரம்!
Samanea saman

மற்ற மரங்கள் போல் இல்லாமல் இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளியிடும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுவதால் காற்று மாசுப்பாட்டை குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கிறது.

பல வருடங்கள் நன்றாக வளர்ந்த மரங்களை வெட்டி மரப்பொருட்கள் செய்யப்படுகின்றன.  

இந்த மரத்தின் காய், இலைகள் கால்நடைகளுக்கு சிறந்த உணவாக பயன்படுகிறது. மேற்கிந்திய தீவுகளில் இந்த மரத்தின் இலைகளை உட்கொள்வதன் மூலம் சிறந்த மலமிளக்கியாக பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் விதைகளை சாப்பிட்டால் தொண்டை புண் குணமாகும் என கூறப்படுகிறது. மேலை நாடுகளில் இந்த மரத்தின் இலை, காய், விதைகளை வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த மரத்தின் கிளைகள் வலிமையாக இல்லாத காரணத்தால், சூறை காற்று வீசும் போது சுலபமாக முறிந்து கீழே விழுந்து விடும். எனவே வீட்டின் அருகில் வளர்க்காமல், சிறிது தொலைவில் மரத்தை நடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com