வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைத்து அதன் மூலம் பெறப்படும் ரசாயனக் கலப்பில்லாத சத்தான காய்கறிகளை உணவாக சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. அவர்களுக்காக சில ஆலோசனைக் குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
தோட்டம் அமைக்கும் முன்பு உங்கள் மாடி அதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், வாடகை வீடு என்றால் உரிமையாளர் அனுமதி பெற்ற பின்பே செடிகளை நடுங்கள். இல்லையெனில் உழைப்பு, பணம் போன்றவை வீணாகி மனஸ்தாபங்களும் எழ வாய்ப்பாகும்.
செடிகளை வளர்க்க வீட்டில் பயனற்ற தண்ணீர் கேன், பழைய குடம், பக்கெட் போன்ற பொருட்களே போதும். காய்கறி விதைகள் ஐந்து ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. இவற்றை வாங்கி சிறிய அளவில் தோட்டம் அமைத்து அதில் இருந்து அதிகப் பலன்களைப் பெறலாம்.
விதைகளை அதன் காலாவதி காலத்தைப் பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம். சத்தற்ற காலாவதியான விதைகளை வாங்கி விதைத்தால் பெரும்பாலும் முளைக்காமல் போகலாம். இதனால் தோட்டம் அமைக்கும் முயற்சியுடன் நேரமும் பணமும் வீணாகும்.
இதைத் தவிர்க்க செடியிலேயே காய்கறிகள் முற்றும் வரை விட்டு முற்றிய பிறகு அதில் இருந்து விதைகளை எடுத்து சிறிது அளவு சாம்பலுடன் கலந்து வைத்துக் கொள்ளலாம். புதிதாகத் தோட்டம் அமைப்பவர்கள் இப்படி விதை சேமிப்பவர்களிடம் கேட்டும் வாங்கலாம்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தொட்டிகளை விட, மண் தொட்டியில் செடி, கொடிகளைப் பயிரிடுவது நல்லது. அளவுக்கு அதிகமான தண்ணீரை மண் தொட்டி உறிஞ்சிக் கொள்ளும். மீதம் உள்ள தண்ணீர் சிறு துளை வழியாக வெளியேறி விடும்.
தொட்டிகளில் மண் நிரப்பும்போது விளிம்பு வரை அழுத்தி நிரப்பக் கூடாது. தொட்டியில் முக்கால் அளவு உயரத்துக்கு நிரப்பினால் போதும். மண்ணை நிரப்புவதற்கு முன்பு தொட்டியில் இருந்து அதிகபட்ச நீர் வெளியேறுவதற்கான துளைகள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மண் வளமாக உரம் தேவை. ஏதேனும் ஒரு தொட்டியில் கொஞ்சம் மண் போட்டு காய்கறி கழிவுகள், முட்டை ஓடு, பயன்படுத்திய டீ தூள் போன்றவற்றை போட்டு அதற்கு மேல் கொஞ்சம் மண் போட்டு வைத்துவிட்டு தினமும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கிளறி விட்டால் அதுவே இயற்கையான உரமாகிவிடும்.
வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் பெரும்பாலும் நலம் தரும் நாட்டுக் காய்கறிகளை விதைப்பது நல்லது. அதிலிருந்து விதைகளை எடுத்து மீண்டும் மீண்டும் பயிரிடலாம். ஹைப்ரீட் வகையை விதைத்தால் அதிலிருந்து மீண்டும் நாம் செடிகளை விதைத்து மகசூலை எடுக்க முடியாது.
செடிகள் வைத்தால் மட்டும் போதாது. அதற்கு பராமரிப்பு அவசியம். வைக்கும் செடிகள் செழித்து வளர தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டின் பின்பக்கம் மண் பரப்பில் உள்ள தோட்டம் எனில், தனியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. பாத்திரம் கழுவும் நீர், துணி துவைக்கும் நீர் போன்றவற்றை செடிகளுக்கு செல்லும்படி செய்யலாம்.
முக்கியமாக, செடிகளுக்கு பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கு நிறைய இயற்கை பூச்சி மருந்துகள் இருக்கின்றன. அதை முறையாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்யலாம். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
தற்போது மாடித்தோட்டம் அமைத்துத் தரவும் மண்புழு இயற்கை உரம் போன்றவற்றை விற்பனை செய்யவும் அனுபவமிக்க பலர் முன்வந்துள்ளனர். தகுந்தவர்களிடம் ஆலோசனைகள் பெற்று வீட்டிலேயே தோட்டம் அமைத்து பலன் பெறலாம்.