
பரந்து விரிந்த பைக்கால் ஏரி ரஷ்யாவின் தென் சைபீரியாவின் மலைப் பகுதியில், மங்கோலிய எல்லைக்கு வடக்கே அமைந்துள்ளது. இது உலகின் மிக ஆழமான ஏரியாக கருதப்படுகிறது. இதன் ஆழம் சுமார் 1,642 மீட்டர் (5,387 அடி). பைக்கால் ஏரியானது 636 கி.மீ. நீளமும், 80 கி.மீ. அகலமும் கொண்டது. இது பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய ஏரியாக உள்ளது. இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றையும் விட மிகப்பழைய ஏரியாகும. பைக்கால் ஏரியில் உள்ள நீரின் அளவானது அமெரிக்காவில் உள்ள ஐந்து பேரேரிகளில் உள்ள மொத்த நீரின் அளவைக்காட்டிலும் அதிகமானது.
உலகில் நீர்ம வடிவில், நிலத்தின் மேற்புறத்தில் உள்ள தூய்மையான நீரில் 20% இந்த ஓர் ஏரியில் உள்ளது. ரஷ்யாவின் நன்னீரில் 90% இவ்வேரியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பைக்கால் ஏரி அதன் தெளிவான நீருக்கு பெயர் பெற்றது.
ஏரியின் மேற்பரப்பில் இருந்து நீரின் 130 அடி கீழ் (40 மீ) வரை உள்ள பொருட்களைக் தெளிவாக காணமுடியும் என்பது இந்த ஏரியின் சிறப்பு அம்சமாகும். ஜனவரி முதல் மே வரை, பைக்கால் ஏரி 1-2 மீ ஆழம் வரை ஒரு பனிப்படலத்தால் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் ஆண்டு முழுவதும், அதன் வெப்பநிலை சராசரியாக 4ºC ஆக இருக்கும். பனிக்கட்டி நீர்பரப்பு என்ற புகழ் இருந்தபோதிலும், கோடை மாதங்களில் ஏரியின் மேற்பரப்பு வெப்பநிலை 22–23ºC ஆக உயர்கிறது.
பைக்கால் பேரேரி சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. ரஷியாவில் உள்ள நன்னீரில் 90 சதவீதம் இந்த ஏரியில் தான் இருக்கிறது. சிகோய், உடா, செலெங்கா மற்றும் பர்குன்சின் உட்பட பெரிதும், சிறிதுமாய் சுமார் 330க்கும் மேற்பட்ட ஆறுகள் மற்றும் நீரோடைகள் இதில் பாய்கின்றன. இதில் சுமார் 22 சிறு தீவுகள் உண்டு. இத்தீவுகளுள் பெரியது ஒல்க்கோன் என்னும் தீவு ஆகும். இத்தீவு 72 கி.மீ நீளம் கொண்டதாகும்.
பைக்கால் ஏரியில் 1085 வகையான நீர்வாழ்ச் செடி இனங்களும், 1550 நீர்வாழ் விலங்கினங்களும் வாழ்கின்றன. இவ்வேரியில் வாழும் உயிரினங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. ஏனெனில் இங்குள்ள உயிரினங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் வேறெங்கும் காண முடியாது.
இப்பகுதியில் 320 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் உள்ளன. மேலும் இந்த ஏரியின் கிழக்குப் பகுதியானது பர்யாட் பழங்குடியினரின் வாழிடமாக உள்ளது. 1996-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால், இது `உலக பாரம்பரிய களம்’ என அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பைக்கால் ஏரி 'ஏரிகளின் மூத்த சகோதரி' என்றும் அழைக்கப்படுகிறது.
சுமார் பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பைக்கால் ஏரியின் நீர் மிகவும் தூய்மையாக இருந்ததால், மனிதர்களால் சுத்திகரிக்கப்படாமலேயே அவற்றை உபயோகிக்க முடிந்தது. தற்போது, ஏரியின் சில பகுதிகள் மிகவும் மாசுபட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதில் நீந்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு தீவிர சாகசக்காரராக இருந்தால், பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பைக்கால் ஏரியின் நீரில் டைவ் செய்யலாம்!
சமீபத்திய ஆண்டுகளில், பைக்கால் ஏரியில் சீல்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம், இறைச்சிக்காகவும், மருத்துவ நோக்கங்களுக்காக சீல் எண்ணெயை உற்பத்தி செய்யவும் இவை வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக இளம் சீல்களின் ரோமங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 1,000 சீல்கள் வேட்டையாடப்படுகின்றன.