இந்திய விவசாயிகள் தற்போது பருவநிலை மாற்றம், ஆட்கள் பற்றாக்குறை, விளைநிலங்களின் பரப்பு குறைவு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொடர்ச்சியான நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் விவசாயிகள் நடவு செய்யும்பொழுது அரசின் அறிவுரைகளை ஏற்று தங்களுடைய நடவுப் பணியை தொடங்குகின்றனர். இந்த நிலையில் இந்திய வேளாண் உற்பத்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு அறிவிப்பில், ‘விவசாயிகள் பயனடையும் பொருட்டு இந்திய வேளாண் துறை மூங்கில் உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் வழங்கிய வருகிறது. மேலும், மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக 2029ம் ஆண்டிற்குள் இந்தியா மூங்கில் உற்பத்தியில் 94.38 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தோட்டக்கலை பயிராக மாற்றப்பட்டுள்ள மூங்கில் நீண்ட நெடுங்கால பயிர் வகையாகும். மூங்கில் நடவு செய்து நான்கு ஆண்டுகளுக்கு எந்தவித வருமானத்தையும் தராது. ஆனால், அதன் பிறகு 90 ஆண்டுகள் வரை அதிக அளவிலான லாபத்தை தரும் ஒன்றாக மூங்கில் உள்ளது. இந்தியாவில் மூங்கிலை கொண்டு பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், மூங்கில் கூழைக் கொண்டு பேப்பர்கள், ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இன்னும் பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு மூங்கில் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் மூங்கிலுக்கான சந்தை மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
மேலும், மூங்கிலை பயிரிடும் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் அதற்காக செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. குறைந்த அளவு நீர், மிகக் குறைந்த பராமரிப்பு ஆகியவையே மூங்கில் சாகுபடிக்கு போதுமானதாகவும். மூங்கில் பயிரிட்ட விவசாயிகள் பொறுமையாக காத்திருந்தால் நான்கு ஆண்டுகள் கழித்து பயன் தரத் தொடங்கும். 90 ஆண்டுகள் வரை நிலையான வருமானம் கிடைக்கும்.
தற்போது இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் அதிக அளவில் மூங்கில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றனர்.