20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போனதாகக் கருதப்பட்ட உலகிலேயே மிகச் சிறிய பாம்பு, தற்போது பார்படாஸ் நாட்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு 'பார்படாஸ் த்ரெட்ஸ்னேக்' (The Barbados threadsnake) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு ஷூ லேசை விட மெல்லியதாகவும், ஒரு சாதாரண நாணயத்திற்குள் அடக்கும் அளவிற்கும் மிகச் சிறியது. பார்ப்பதற்கு இது ஒரு நீளமான மண்புழுவை போல காட்சியளிக்கும்.
இதன் சிறிய அளவின் காரணமாக, இந்த பாம்பை வெறும் கண்ணால் பார்ப்பது மிகவும் கடினம். ஆகையால் கூட, சுமார் 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் கவனிக்கப்படாமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம். அதன்பின் பார்படாஸ் தீவில் மார்ச் மாதம் நடந்த ஒரு சூழலியல் ஆய்வின்போது, சுற்றுச்சூழல் அமைச்சகமும், 'Re:wild' என்ற பாதுகாப்பு அமைப்பும் இணைந்து இந்த பாம்பை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த அமைப்பினைச் சார்ந்த கோனர் பிளேட்ஸ் (Connor Blades) என்ற ஆராய்ச்சியாளர், கிழக்கு கரீபியன் தீவில் உள்ள ஒரு காட்டில் பாறையைத் தூக்கியபோது, இந்த அரிய பாம்பைக் கண்டுபிடித்துள்ளார். இது கண்டுபிடிக்கப்பட்டபோது, மண்புழுக்களுக்கு அடியில் ஒரு பாறையின் கீழ் மறைந்திருந்தது. இந்த பாம்பை ஒரு வீடியோ எடுத்து, அதிலிருந்து ஒரு அசையா படத்தைப் பயன்படுத்தி, அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் முதுகில் இருக்கும் ஆரஞ்சு நிற கோடுகள், தலையின் பக்கவாட்டில் இருக்கும் கண்கள் மற்றும் மூக்கில் இருக்கும் சிறிய செதில் ஆகியவை இதன் தனித்துவமான அடையாளங்கள். மற்ற சில ஊர்வன இனங்கள் இணை சேராமல் கருவுற்ற முட்டைகளை இடும் நிலையில், இந்த பாம்பு இனம் தனித்துவம் வாய்ந்தது.
பார்படாஸ் த்ரெட்ஸ்னேக், நிலத்தில் வசிப்பது, கரையான் மற்றும் எறும்புகளை உண்பது போன்ற தன்மைகளைக் கொண்டது. ஒரு பெண் பாம்பு ஒரு முட்டையை மட்டுமே இடும். முழுமையாக வளர்ச்சியடைந்த பாம்பு 10 சென்டிமீட்டர் வரை இருக்கும். கண்ணில்படாத அளவுக்குச் சிறியதாக இருக்கும். பார்படோஸ் த்ரெட்ஸ்னேக்குகள் பார்வையற்ற பாம்புகள் என்பதால், அவை பெரும்பாலும் மறைவான வாழ்க்கை முறையைக் கொண்டன.
பார்படாஸ் தீவில் பல அரிய இனங்கள் அழிந்துவிட்டன. இந்த சிறிய பாம்பு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, வனவிலங்கு வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.