

உழவனின் நண்பன் என சொல்லப்படும் மண்புழு உரம், அதனால் மண் பெறும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மண் வளமான தாகவும், செழுமையாகவும் இருக்க மண்புழுக்கள் அவசியம். கடந்த வருடங்களில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் மண்ணின் தன்மை மாறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மண் ஆரோக்கியம் மேம்பட மண்புழு உரத்தை நம் செடிகளுக்கு கொடுக்கவேண்டும்.
இருபாலரின மண்புழுக்கள், மண்ணை துளையிட்டு பூமியின் ஆழம் வரை சென்று உள்ளிருக்கும் மண்ணையும் வளமானதாக மாற்றுகின்றன. மண்ணரிப்பை கட்டுப்படுத்தும் மண்புழுக்கள், நிலத்தடி நீரையும் உயர்த்துகின்றன.
மண்ணின் மேலாக இருக்கும் மண்புழுக்கள் மண்ணின் மேல் விழும் கழிவுகள், கால்நடைகள் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், உள்ளிட்டவற்றை சிதைத்து வாழக் கூடியவை. இவையே நமது வீட்டுக் கழிவுகளை உரமாக மாற்ற பெரிதும் பயன்படும் மண்புழுக்கள் ஆகும்.அறிவியலை மிஞ்சும் இயற்கை: மரணமில்லா வாழ்வும், மர்மமான பிறப்பும்!
இதற்கு பிறகு இருக்கும் மண்புழுக்கள் மண்ணின் மேலிருந்து கிடைக்கும் இலைகளை, மக்கும் குப்பைகள் உள்ளிட்ட உணவை உண்டு மண்ணை வளமாக மாற்றும் இயல்புடையவை.
கீழ்மட்ட மண்புழுக்கள் மண்ணின் அடி ஆழம் வரை உணவுகளையும், சத்துக்களையும் எடுத்துச் செல்லக் கூடியவை. இந்த மண்புழுக்களின் உடலில் பலவித திரவங்களும், நுண்ணுயிரிகளும் உருவாகின்றன. இவற்றால் மண்மேலும் செழிப்படைகிறது.
இவை மண்ணிற்கு தேவையான காற்றோட்டம், பொலபொலப்பு, நீரேற்றம் உள்ளிட்டவைகளையும் அளிக்கிறது. மண்ணை மேலும், கீழுமாக புரட்டி உழுதுகொண்டே இருக்கின்றன.
ஏதேனும் நிழற் பாங்கான சற்று வெளிச்சம் குறைவாக இருக்கும் இடத்தில் தொட்டி அமைத்து வீட்டுக் கழிவுகளை இடவேண்டும். பின் மண்ணை இலேசாக தோண்டினாலே கிடைக்கும் பத்து, பதினைந்து மண்புழுக்களை ஒரு மாதமான மக்கிய சமையலறை கழிவுகள் உள்ள தொட்டியில் விடவேண்டும்.
சமையலறை உரத்தை பராமரிப்பது போலவே இதனையும் பராமரிக்க வேண்டும். ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையெனில் தண்ணீர் தெளிக்கலாம். சாணக்கரைசல், சாணப்பொடியுடன் மண்புழுக்கள் விரும்பி உண்ணும் வெல்லப் பாகையும் தெளிக்கவேண்டும்.
இவற்றை புரட்டி விடவேண்டாம். அந்த தொட்டியிலிருந்து மேலாக குருணை, குருணையாக கிடைக்கும் கறுப்பு உரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, நாம் அடுத்ததாக சேர்த்து தயாரித்து வைத்திருக்கும் வீட்டுக்கழிவு மக்கிய உரத்தை அதில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கழிவுகளையும் உண்டாக்கலாம். ஒவ்வொரு வாரமும் நமக்கு மண்புழு உரம் கிடைக்கும்.
இதை சாக்கு கொண்டு மூடி வைக்கவேண்டும். பல்லி, எலி இவற்றிலிருந்து மண்புழுக்களை பாதுகாக்க வேண்டும். மண்புழுக்களின் முட்டைகளை பாதுகாத்து அதிலேயே வைக்க அவை பெருக்கமடையும்.
மண்புழு உரமென்பது நம் வீட்டுக் கழிவுகளை மண்புழுக்கள் அவற்றின் நொதிகள், நுண்ணுயிர்கள் உடன் சிதைத்து நல்ல உரமாக மாற்றுவது. இதில் செடிகள் வளர தேவையான மணிச்சத்து, சாம்பல் சத்து, தழைச்சத்துடன் பலவிதமான நுண் சத்துக்களும் உள்ளன.
இவை செடிகளில் நோய் தாக்குதலை தடுத்து, சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்களை செடிகள் தர துணை புரிகின்றன.
இவ்வாறு வீட்டு கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரித்து இயற்கையான முறையில் பூரண சத்துக்களை பெறலாம்.
இவை யாவும் எங்கள் வீட்டில் செய்து பலன் பெறுவதை எழுதியுள்ளேன். நர்சரி அண்ணன் முதலில் சொன்னபடி செய்து தற்போது பலருக்கும் உரமும், காய், கனிகளையும் தருகிறேன்.