விவசாயிகளுக்கு இலாபம் தரும் கருப்பு கோதுமை: இது ஏன் பெஸ்ட் தெரியுமா?
கோதுமையில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கவில்லை என வருந்தும் விவசாயிகளா நீங்கள்? இனி வருந்த வேண்டாம். உங்களுக்காகவே இருக்கிறது இலாபத்தை அள்ளிக் கொடுக்கும் கருப்பு கோதுமை. வாருங்கள் இதைப் பற்றி மேலும் பல விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் பருவநிலைக்கேற்ப பலவிதமான பயிர்களை விளைவித்து வருகின்றனர். இதில் மிகவும் முக்கிய உணவுப் பொருட்கள் அரிசி மற்றும் கோதுமை. தென்னிந்தியாவில் அரிசியும், வட இந்தியாவில் கோதுமையும் பிரதான உணவாக இருக்கின்றன. இந்நிலையில், சாதாரண கோதுமையை விடவும் கருப்பு கோதுமையில் அதிக இலாபத்தை பெற முடியும் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
கருப்பு கோதுமையில் மகசூலும் அதிகமாக கிடைக்கும்; அதோடு இதன் விலையும் அதிகம். சாதாரண கோதுமையின் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை விற்பனையாகிறது. ஆனால் கருப்பு கோதுமையின் விலை அதனை விட 3 முதல் 4 மடங்கு உயர்ந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை விற்பனையாகிறது.
கருப்பு கோதுமையை விதைக்க ராபி பருவமே (அக்டோபர் முதல் மார்ச்) சிறந்தது. மேலும், ஈரப்பதம் இருக்கும் நவம்பர் மாதத்தில் விதைப்பது மகசூலை அதிகரிக்க உதவும். நவம்பர் மாதத்திற்கு பிறகு இதனை விதைத்தால் மகசூல் குறைந்து விடும். ஆய்வு முடிவுகளின் படி 1 பிகா (165 அடி × 165 அடி) நிலத்தில் சுமார் 1,200 கிலோ கருப்பு கோதுமை மகசூலாக கிடைக்கும். கருப்பு கோதுமை விளைச்சலின் போது ஜிங்க் மற்றும் யூரியா போன்றவற்றை உரமாகப் பயன்படுத்தலாம்.
கருப்பு நிறத்தின் காரணம்:
கருப்பு கோதுமையில் அதிகளவில் அந்தோசயனின் என்ற நிறமி உள்ளது. இந்த நிறமி தான் இதன் கருப்பு நிறத்திற்கு காரணமாக அமைகிறது. மேலும் இதில் அயனோசயனின் நிறமி 140 பிபிஎம் வரை இருக்கிறது. ஆனால் சாதாரண கோதுமையில் அயனோசயனின் நிறமி 11 பிபிஎம் வரை மட்டுமே இருக்கிறது. கருப்பு கோதுமையில் இயற்கையான ஆக்ஸினேற்றம் மற்றும் ஆன்டி பயாடிக் அந்த்ரோசயனின் ஆகியவையும் நிறைந்துள்ளது.
சாதாரண கோதுமை விளைச்சலைப் போன்று தான் கருப்பு கோதுமையையும் விதைக்க வேண்டும். இருப்பினும், இதற்கு முறையான பயிற்சி அவசியம் என வேளாண் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். அதிக சந்தை மதிப்புள்ள கருப்பு கோதுமை, பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இருக்கும் தேசிய வேளாண் உணவு பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (NABI) விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.
தற்போது வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்ட விவசாயிகளால் கருப்பு கோதுமை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. பாரம்பரிய கோதுமை வகைகளின் மதிப்பானது காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. இனிவரும் காலங்களில் சாதாரண கோதுமையை விட கருப்பு கோதுமையின் அறுவடை தான் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலாபத்தை அள்ளித் தரக்கூடிய கருப்பு கோதுமையைப் பயிரிட அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். நட்டத்தில் தவிக்கும் விவசாயிகளுக்கு கருப்பு கோதுமை ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் இதனைப் பயிரிட முறையான பயிற்சியும், தெளிவான புரிதலும் இருக்க வேண்டியது அவசியமாகும்.