
பிரேசில் நாட்டில் 1980களில் கண்டறியப்பட்ட டைனோசரின் கால் தடம், முற்றிலும் புதிய வகை டைனோசர் இனத்தைச் சார்ந்தது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.
பிரேசில் நாட்டின் Sao Paulo மாநிலத்தில், ஹராராகுவாரா என்ற நகரில் கடந்த 1980ம் ஆண்டு பாறைகள் மீது இருந்து ஒரு கால் தடத்தின் சுவடு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை காலமாக இந்த கால் தடத்தை வைத்து ஆய்வாளர்கள் செய்த ஆய்வில் முற்றிலும் புதிய வகை டைனோசர் இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
தொடக்கத்தில் ஒரு பாலைவன மணல் மேட்டில் இந்தக் கால் தடம் பதிந்திருக்கலாம் என்றும், காலப்போக்கில் இது அப்படியே பாறையாக மாறி இருக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதைக் கண்டுபிடித்ததும் பிரேசில் நாட்டின் புவியியல் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது. ஆனால், இதன் மாதிரிகளை மற்ற டைனோசர் இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால் விஞ்ஞானிகள் குழப்பம் அடைந்தனர்.
ஆனால், தற்போது Farlowichnus Rapidus என்னும் முற்றிலும் புதிய வகை டைனோசருக்கு சொந்தமான கால் தடம் இது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கால் தடத்தின் மாதிரிகளை சோதித்துப் பார்த்ததில், இந்த டைனோசர் கிட்டத்தட்ட 90 சென்டி மீட்டர் உயரம் வரை இருந்திருக்கலாம் எனவும், பாலைவனத்திலேயே அதிவேகமாக செல்லக்கூடிய டைனோசராக இது இருந்திருக்கும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, இந்த வகை டைனோசர் இனம் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் மூலமாக டைனோசர் இனங்கள் பற்றிய ஆய்வில் பல முன்னேற்றங்கள் கிடைக்கும் எனவும், இதேபோன்று வேறு ஏதாவது மாதிரிகள் இந்த டைனோசர் இனத்தோடு ஒத்துப்போகும் வகையில் கிடைக்கிறதா எனத் தேடிப் பார்ப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.