தைல மரங்களில் இருந்து விவசாயிகளுக்கு விடியல் கிடைக்குமா?

தைல மரங்கள்
தைல மரங்கள்Image credit - pixabay.com
Published on

விவசாயத்தின் வளர்ச்சி இன்றைய காலக்கட்டத்தில் எந்த நிலையில் உள்ளது என அனைவருக்குமே தெரியும். இப்படியான சூழலில் பல வருடங்களாக விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் தைல மரங்கள் இன்றளவும் அழிக்கப் படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தைல மரங்கள் அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சும் என்பதால், அம்மரங்களைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. மேலும், தைல மரங்கள் அதன் இடத்தில் வேறு எந்தத் தாவரத்தையும் வளர விடாமல் தடுக்கும் அளவிற்கு அதிக வெப்பநிலையைக் கொண்டவை. இதனால் பல்லுயிர்ப் பெருக்கம் இயல்பாகவே அழிந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் பெருகி இருக்கும் தைல மரங்களால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழமை வாய்ந்த உயிரினங்களும், தாவரங்களும் அழிந்து வருகின்றன. இதனால், இனி வரும் காலங்களில் விவசாயம் செய்வதில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். தைல மரங்களை அகற்றிட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அதில் எந்தப் பலனும் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதுபற்றி அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காகிதம் தயாரிப்பதற்காகத்தான் அதிகளவில் தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், இதனால் உண்டாகும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை யாரும் இங்கே கண்டுகொள்வதில்லை. மேற்கத்திய நாடுகளில் காகிதங்களைத் தயாரிக்க தைல மரங்களைத் தவிர்த்து, வேறு மரங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலைமை. விவசாயிகளுக்கு ஏற்கனவே பல வகையில் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், தைல மரங்களும் விவசாய நிலங்களைப் பதம் பார்ப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. மேலும், நிலத்தடி நீராதாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதால் நீர் மட்டமும் குறைந்து கொண்டே போகிறது.

தைல மரங்கள்
தைல மரங்கள்Image credit - pixabay.com

தைல மரங்கள் அல்லாது சவுக்கு மற்றும் பிற மரங்களில் காகிதம் தயாரிக்க அரசு முன்வந்தால், அதனை விவசாயிகளே சாகுபடி செய்து தரவும் தயாராக இருக்கின்றனர். ஆனால், தைல மரங்களையே நம் நாடு நம்பியிருப்பது, தற்போதைய காலத்தில் மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது.

தைல மரத்தின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்ட, வெட்டத் துளிர்க்கும் தன்மையைக் கொண்டவை. 12 ஆண்டுகள் முடிந்த பிறகு வெட்டும்போது, வேருடன் பிடிங்கி விட வேண்டும். ஆனால் பலரும் இப்படிச் செய்யாமல், அப்படியே விட்டு விடுவதால் மேலும் சில ஆண்டுகளுக்கு இம்மரம் வளர்ந்து விடுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மேலும் பாதிப்படைகின்றன.

இதையும் படியுங்கள்:
சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இதைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்!
தைல மரங்கள்

ஆகவே சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பெருங்கேடு விளைவிக்கும் தைல மரங்களை அகற்றிடவும், இனி வளர்க்கக் கூடாது என தடை விதித்தும் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர். தற்போது தைல மரங்களை வேருடன் பிடுங்கி, அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலைக் காக்கும் மரங்களை வளர்த்தால் சில ஆண்டுகளில் நிலத்திலும், சுற்றுச்சூழலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தைல மரத்தின் கேடுகளை உணர்ந்து, விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com