கால்நடைகளுக்கான தீவனமாகப் பயன்படும் புல் சாகுபடி அதிக வருமானத்தைத் தருவதால் விவசாயிகள் பலரும் புல் சாகுபடி விவசாயத்தில் தற்போது மும்முரம் காட்டத் தொடங்கி இருக்கின்றனர். இந்தியாவில் கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கான கூட்டுத் தொழிலாக உள்ளது. விளைநிலங்களை வைத்திருக்கும் பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்க்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், கால்நடைகளுக்குத் தேவையான தீவனப்புல் சாகுபடி போதுமான மற்றும் நிலையான வருமானத்தைத் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கால்நடை தீவனப்புல் சாகுபடி செய்யும் விவசாயி ஒருவர் குறிப்பிடுகையில், “கால்நடைகளுக்கு அதிகம் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, மக்காச்சோள தட்டை, பயிர் வகைகள், செடி வகைகள், கொடி வகைகள் மற்றும் நிலங்களில் மேய விடுவது மூலம் அதிக தீவனங்கள் கிடைக்கின்றன. ஆனால், இவற்றிலிருந்து கால்நடைகளுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட, தீவனப்புல் வழியாக அதிக அளவிலான ஊட்டச்சத்து கிடைக்கின்றது. இதனால் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, அதிக பால் கொடுக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. மேலும், விற்பனைக்காக வளர்க்கப்படும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது.
இதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் தீவனப்புல்லை கேட்டு வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, கோ-3, கோ-4 ஆகிய ரக உரங்களை இட்டு பயிரிட்டு தீவனப்புல் பயிரிடப்படுகிறது. இவற்றில் இருந்து கிடைக்கும் புற்களை ஆடு, மாடுகள் விரும்பி சாப்பிடுகின்றன. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு அதிக தீவனம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
தீவனப்புல் 4 அடி முதல் 5 அடி வரை வளரும். நடவு செய்து 30 நாட்களில் தொடர்ந்து அறுவடை செய்ய முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு இது தொடர்ச்சியாக பயன் தரும். ஒரு கட்டு தீவனப்புல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற முடியும்.
மேலும், தீவனப்புல் வளர்ப்பதற்கு குறைந்த அளவு யூரியா போதுமானது. அதிக ஆட்களோ, அதிக நேரம் செலவிடவோ, பூச்சி தாக்குதலோ என்ற எந்தவித பிரச்னையும் அதிகம் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.