
தோட்டக்கலை என்பது பல இந்தியர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது. இதனால் பலரும் அவர்களின் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பல அழகிய செடிகளை வளர்க்க விருப்பம் காட்டுகின்றனர். அப்படி வீட்டில் வளர்க்கப்படும் பல தாவரங்களில், பல ஆண்டுகளாக பிரபலமாக இருந்த தாவரங்களில் ஒன்று மயில் மாணிக்கம்.
இந்தச் செடியில் அடர் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூக்கும். அது பார்ப்பதற்கு மயில் தோகையில் மாணிக்கம் முளைத்திருப்பது போல் இருப்பதால், இதை மயில் மாணிக்கம் என சொல்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதன் இலைகள் மயிர்க் கால்கள் போல இருப்பதால், மயிர் மாணிக்கம் என்ற சொல் காலப்போக்கில் மருவி, மயில் மாணிக்கமாக மாறிவிட்டதாகவும் சொல்கின்றனர்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த செடி பெரும்பாலான வீடுகளில் இருப்பதைப் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது இவற்றைக் காண்பது அரிதாக உள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தச் செடியைச் சுற்றியும் பல கட்டுக்கதைகள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அவை அனைத்துமே இந்த செடியைப் பராமரிப்பதில் உள்ள கஷ்டத்தை குறிப்பிடுபவையாகவே இருப்பதால் இப்போது இந்த செடிகளை யாரும் வளர்க்க விரும்புவதில்லை.
மயில் மாணிக்கம் செடியானது Morning Glory Family எனப்படும் காலையில் பிரகாசமாகக் காட்சியளிக்கக் கூடிய செடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக வெப்ப மண்டலப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகிறது. நாம் வீட்டில் வளர்க்கும் மற்ற கொடி வகைச் செடிகளை விட, இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. நல்ல சூழ்நிலையில், 10 முதல் 15 அடி உயரத்தை ஒரு ஆண்டிற்குள்ளாகவே எட்டிவிடும்.
சூரிய ஒளியில் செழித்து வளரும் மயில் மாணிக்கச் செடிக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 8 மணி நேர சூரிய ஒளி தேவை. அப்போதுதான் வேகமாக வளரும். PH அளவு 6-7 வரை இருக்கும் வளமான மண்ணை விரும்பும் இந்தத் தாவரத்திற்கு, அதிக நீர்ப்பாசனம் இருக்கக் கூடாது. ஒருமுறை தண்ணீர் பாய்ச்சியதும், ஒரு அங்குல அளவுக்கு மண் உலர்ந்து போகும்வரை நீர் பாய்ச்சக் கூடாது.
மயில் மாணிக்கம் செடி வேகமாக வளர்வதற்கு, கொடி பற்றிக் கொண்டு ஏற, குறுக்கும் நெடுக்குமாக வேலியோ அல்லது கொம்புகளையோ அமைப்பது அவசியம். இந்தத் தாவரம் எளிதாக புதர் மண்டிவிடும் என்பதால், அவ்வப்போது செடியைக் கத்தரித்து, அதிக ஊடுருவல்களைத் தடுக்க வேண்டும்.
தோட்டத்தில் இந்தச் செடிகளை பல விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். அழகுக்காக வீட்டின் முன்னே தொங்கும் பூத்தொட்டிகளில் வைக்கலாம். அல்லது தோட்டத்தில் உள்ள வேலிகளில் ஏறும் கொடியாகப் படர விடலாம். இப்படி பல விதங்களில் இந்தச் செடியை நாம் விருப்பம் போல வளர்க்கலாம்.
ஆனால் கால ஓட்டத்தில் இந்த செடி காணாமல் போய்விட்டது. அப்போதெல்லாம் மயில் மாணிக்கம் செடி இல்லாத வீடுகளே இருக்காது. ஆனால் இப்போது இவற்றை பார்க்க முடியவில்லை. நீங்கள் கடைசியாக எப்போது இந்தச் செடியை பார்த்தீர்கள்? எனக் கமெண்ட் பகுதியில் சொல்லுங்கள் மக்களே.