நடப்பாண்டில் 521.27 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய முடிவு!

நடப்பாண்டில் 521.27 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய முடிவு!

ரிசி தட்டுப்பாட்டை நீக்குவதற்காக நடப்பு ஆண்டில் காரீஃப் பருவத்தில் 521.27 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு இந்திய உணவுக் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில உணவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய அரிசி தட்டுப்பாட்டை போக்க பாஸ்மதி இல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்து இருக்கிறது. அப்படி இருந்தும் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக நெல் அதிகம் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கவும், பல்வேறு சலுகைகள் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் பல்வேறு வகையான மானியங்கள், சிறப்பு திட்டங்கள் ஆகியவற்றை எளிய முறையில் விவசாயிகளுக்குக் கொண்டு செல்வதற்கான வழிவகைகளை தீவிரமாக முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டில் 496 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கூடுதல் கொள்முதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிசா, உத்தர பிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பீகார், ஆந்திரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வரிசைப்படி தேர்வு செய்யப்பட்டு, இம்மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாது, நடப்பு 2023 - 2024ம் ஆண்டு காலகட்டத்தில் 33.09 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானியங்களை மாநிலங்கள் கொள்முதல் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் ஆறு வகையான சிறுதானியங்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்யப்பட உள்ளன. மேலும் நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் கையிருப்பு, விலைப்பட்டியல், அளவு பங்கீடு ஆகியவற்றை சீராகக் கண்காணித்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com