பூனைகள் உலகெங்கிலும் நாய்களைப் போலவே அதிகம் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். அவற்றின் தனித்துவமான பண்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பார்வைத் திறன்: பூனைகளுக்கு இரவில் நன்றாகக் கண் தெரியும். மனிதர்களை விட குறைந்த வெளிச்சத்தில் பார்க்கும் திறன் பெற்றவை. அவற்றின் கண்களில் அதிக எண்ணிக்கையிலான பார்வை செல்கள் உள்ளன. அவை துல்லியமான இரவுப் பார்வைக்கு காரணமாகின்றன. ஒளி உணர்திறனை அதிகரிக்கும் கேப்டன் லூசிடம் எனப்படும் ஒரு பிரதிபலிப்பு அடுக்கு பூனையின் கண்களில் உள்ளன.
செவித்திறன்: மனிதர்கள் மற்றும் நாய்களை விட அதிர்வுகளைக் கண்டறியும் திறன் கொண்ட விதிவிலக்கான செவித்திறன் கொண்டவை பூனைகள். இவை மிகச்சிறிய உயிரினங்கள் எழுப்பும் ஓசைகளைக் கூட துல்லியமாகக் கேட்க முடியும்.
வாசனைத் திறன்: பூனையின் வாசனைத்திறன் மிகவும் நுண்ணியமானது. சுமார் 50லிருந்து 80 மில்லியன் ஆல்ஃபாக்டரி ஏற்பிகள் உள்ளன. அவற்றால் மிக நுண்ணிய வாசனையைக் கூட அடையாளம் காணவும் மற்ற பூனைகளுடன் தொடர்பு கொள்ளவும் முடிகிறது. இந்த நுண்ணறிவு உணவை அடையாளம் காணவும், அவற்றின் சுற்றுச்சூழலை வழிநடத்தவும் உதவுகிறது.
எலும்பு அமைப்பு: பூனைகளின் எலும்புகள் தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையை தருகின்றன. அவற்றின் முதுகெலும்புகள் மிகவும் மீள் தன்மை கொண்டவை. அவற்றின் உடலை திருப்ப உதவுகின்றன.
விஸ்கர்ஸ்: பூனைகளுக்கு உணர்திறனைத் தருபவை அவற்றின் விஸ்கர்கள் எனப்படும் மீசை முடிகள்தான். அதனால் தங்கள் சூழலில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும். இந்த விஸ்கர்கள் இடைவெளிகளின் அகலத்தை அளவிடவும் இரவில் செல்லவும் அருகில் உள்ள பொருட்களை உணரவும் உதவுகின்றன. இடஞ்சார்ந்த விழிப்புணர்வுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
சுத்தம்: பூனைகள் தங்கள் உடலை சீர்படுத்துவதில் கணிசமான அளவு நேரத்தை செலவழிகின்றன. ரோமங்களை சுத்தமாக வைத்திருக்கும். இதனால் அவற்றின் உடல் வெப்பநிலை ஒழுங்குபடுத்தப்படுகிறது.
வேட்டையாடும் குணம்: நாய்களைப் போலவே பூனைகள் கவர்ச்சிகரமான தோழர்களாகவும் திறமையான வேட்டைக்காரர்களாகவும் இருக்கின்றன. அவற்றின் உடல் வேட்டையாடுவதற்காகவே கட்டமைக்கப்பட்டவை. அவை கூர்மையான நகங்கள் கொண்டுள்ளன. அவை இரையைத் திறமையாகப் பிடிக்க உதவுகின்றன. மேலும், பூனைகள் உள் இழுக்கும் நகங்களைக் கொண்டுள்ளன. அவை வேட்டையாடுவதற்கும், மரம், மதில் போன்ற இடங்களில் ஏறுவதற்கும் உதவுகின்றன. இந்த குணாதிசயம் பிற மாமிச விலங்குகளிலிருந்து அவற்றை வேறுபடுத்துகிறது.
தூங்குதல்: பூனைகள் நீண்ட நேரம் தூங்கும் பழக்கமுடையவை. ஒரு நாளில் சராசரியாக 12லிருந்து 16 மணி நேரம் வரை உறங்கும். அந்தி நேரத்திலும் விடியற்காலையிலும் அவை சுறுசுறுப்பாக இருக்கும். இந்த நேரம் அவற்றுக்கு வேட்டையாடும் சிறந்த நேரமாக இருக்கிறது.
சில அரிய வகை பூனைகள்:
மைனிகூன்: இவை பார்பதற்கு அழகாக இருக்கும். உடல் முழுதும் புசு புசு முடியுடன் இருக்கும். இவை வெளிநாடுகளில் செல்வந்தர் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படும் செல்லப்பிராணி. மிகவும் விலை உயர்ந்தவை. இந்த அரிய வகை பூனைகள் நட்புடன் பழகும் தன்மையுடையவை.
சியாமிஸ் பூனைகள்: நீல பாதாம் வடிவ கண்கள் மற்றும் வண்ணப் புள்ளிகளை கொண்டுள்ள இவை பார்க்க அழகாக இருக்கும்.
வங்காளப் பூனைகள்: இவை காட்டு சிறுத்தைகள் போன்ற தனித்துவமான புள்ளிகள் இவற்றின் உடலில் இருக்கும். சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும்.
ஸ்பிங்க்ஸ்: இவற்றிற்கு ரோமங்கள் இல்லாததால் இவற்றின் தோலைப் பாதுகாக்க சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. இது பாச உணர்வுடன் இருக்கும்.
ஸ்காட்டிஷ் பூனைகள்: இவற்றின் தனித்துவமான மடிந்த காதுகள் மற்றும் வட்டமான முகங்கள் தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.