
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மழை என்றால் அனைவருமே குஷியாகி விடுவார்கள். மழை மனதிற்கு மகிழ்ச்சியையும், இதமான குளிர்ச்சியையும் தரும். மழையை பார்த்து இதுவரை ரசித்தவர்களுக்கு அதில் எத்தனை விதமான வடிவங்கள் இருக்கின்றன என்பது தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. மழைத்துளி.
நீர்த்துளி பூமியில் விழும் வடிவம் தான் மழைப்பொழிவு ஆகும். நீர்த்துளிகள் 0.5 மில்லி மீட்டர் விட்டத்திற்கு அதிகமாக இருந்தால், அதனை மழைப்பொழிவு என்கிறோம். இதுவே, மழைப்பொழிவு 0.5 மில்லி மீட்டர் விட்டத்திற்கு குறைவாக இருந்தால், அதை தூரல் என்று அழைக்கிறோம்.
2. ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை என்பது பனிக்கட்டிகளாக மழைப்பெய்வதாகும். மழைப்பொழிவு 5 மில்லி மீட்டர் விட்டதை விட பெரிய உருண்டை பனிக்கட்டிகளை கொண்டிருந்தால், அது தான் ஆலங்கட்டி மழையாகும். மேகத்தின் குளிர்ந்த பகுதியில் இருந்து சிறு பனிக்கட்டிகளாக இது உருவாகிறது.
3. உறைப்பனி மழை
சில நேரங்களில் மழைத்துளிகள் புவிப்பரப்பிற்கு அருகாமையில் குளிர்ந்த காற்று வழியாக விழும்போது உறைவதில்லை. அதற்குபதில் குளிர்ந்த புவிப்பரப்பை தொடும் போது அவை உறைந்த நிலைக்கு போய் விடுகிறது. இதையே உறைப்பனி என்பார்கள். இதன் விட்டம் 0.5 மில்லி மீட்டரை வட அதிகமாக இருக்கும்.
4. கல் மழை
கல் மழை என்பது நீர்த்துளிகளும், 5 மில்லி மீட்டருக்கு அதிகமான பனித்துளிகள் கலந்துக் காணப்படுவதாகும். சில நேரங்களில் வளிமண்டலத்தில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸூக்கு குறைவாக இருக்கும் அடுக்குகளில் மழைத்துளி விழும் போது நீர் உறைநிலைக்கு சென்றுவிடும். அது புவியை நோக்கி வரும் போது பனிக்கட்டிகளாக மாறுகிறது.
5.பனிப்பொழிவு
மேகத்தில் உள்ள வெப்பம் குறைவதன் மூலமாக நீராவி நேரடியாக பனிக்கட்டிகளாக மாறுகிறது. இதன் பொழிவையே நாம் பனிப்பொலிவு என்கிறோம். இது துருவப்பகுதியிலும், உயரமான மலைப்பகுதியிலும் அதிகம் காணப்படுகிறது.
மழைப்பொழிவின் இந்த ஐந்து வகையில் நீங்கள் இதுவரை எத்தனையை பார்த்து ரசித்திருக்கிறீர்கள். சொல்லுங்க பார்க்கலாம்.