குற்றால சீசன் எப்படி உருவாகுது தெரியுமா?

Kutralam Falls Season
Kutralam Falls Season
Published on

அனைவரும் விரும்பிச் செல்லும் சுற்றுலாத் தலமான குற்றால அருவியில் சீசன் எப்போது தொடங்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், குற்றால சீசன் எப்படி உருவாகிறது என்பதை எத்தனை பேர் அறிவார்கள். குற்றால அருவியில் சீசன் உருவாகும் காரணத்தை விளக்குகிறது இந்தப் பதிவு.

சுற்றுலாவிற்கு செல்லும் பயணிகள் நிச்சயமாக தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றால அருவியைத் தவற விட மாட்டார்கள். குற்றால அருவியில் குளித்தால் அனைவருக்குமே மகிழ்ச்சியுடன் ஒருவித பரவசம் உண்டாகும். இதன் பெயரைக் கேட்டாலே பலருக்கும் சில்லென்ற ஓர் உணர்வு தோன்றும். ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தைத் தான் குற்றால சீசன் என்று சொல்வார்கள். இருப்பினும், ஏன் இந்த மாதங்களில் மட்டும் குற்றால சீசன் உருவாகிறது என்பது பலருக்கும் தெரியாது. இதற்கு மிக முக்கிய காரணம் தென்மேற்கு பருவக்காற்று தான்.

பொதுவாக ஜூன் 1 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கும். இந்த நேரத்தில் அரபிக் கடலில் உருவாகின்ற மழை மேகங்களை மேற்கு தொடர்ச்சி மலை தடுத்து நிறுத்துவதால், கேரள மாநிலம் அதிகளவு மழைப்பொழிவைப் பெறுகிறது. கேரளத்தை ஒட்டி தான் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் இருக்கிறது. இந்தத் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தென்காசி மற்றும் கோயம்புத்தூரில் ஓரளவு இருக்கும் என்பதால் இங்கும் அவ்வப்போது மழையடிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் ஆயங்காவு என்ற கணவாய் வழியாகத் தான் தென்மேற்கு பருவக் காற்று உள்நுழைகிறது. இந்தக் காற்றை குற்றால மலை தடுத்து நிறுத்துவதால் இங்கு மழைப்பொழிவு ஏற்படும். இதனால், குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குற்றால சீசன் தொடங்கும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இருக்கும் குற்றால சீசன் சில நேரங்களில் செப்டம்பர் மாதம் வரையிலும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?
Kutralam Falls Season

குற்றால சீசன் தொடங்கியதும் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியத் தொடங்குவார்கள். குற்றால மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகளும், மரங்களும் இருக்கிறது. இங்கு பெய்யும் மழைநீர் இந்த மூலிகைச் செடிகளின் மீது படர்ந்து அருவியாக கீழே வருவதால் குற்றால அருவி மருத்துவ குணம் நிறைந்து காணப்படுகிறது. ஆக, குற்றால அருவியில் குளித்தால் அது நம் உடல் நலனுக்கு மிகவும் நல்லது என்பதை அறிந்த சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் சீசன் தொடங்கி விட்டால் இங்கு குவிந்து விடுவார்கள்.

இயற்கையின் பேரதிசயங்களில் குற்றால அருவியும் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் அழகு கண்களுக்கு விருந்தாகும்; குற்றால அருவி உடலுக்கு மருந்தாகும். குற்றாலத்திற்கு அருகில் சென்றாலே குளிர்ந்த காற்று வீசுவதை நம்மால் உணர முடியும். நமக்கெல்லாம் இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் குற்றாலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com