

தென்னாப்பிரிக்காவில் உள்ள நமக்வாலேண்ட் (Namaqualand) தேசிய பூங்கா என்பது நமீபியாவின் எல்லைக்கு அருகில், வடக்கு கேப் மாகாணத்தில் உள்ள நமக்வா தேசிய பூங்காவாகும். இது வசந்த காலத்தில் வண்ணமயமான காட்டுப்பூக்களால் நிரம்பி வழியும் ஒரு அரை பாலைவனப் பகுதியாகும். இந்த தேசியப் பூங்கா 4,40,000 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தப் பூங்கா அதன் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்காகவும், குறிப்பாக பூக்கும் காலத்திலும் பல இயற்கை நடைபாதை மற்றும் சுற்றுலா வசதிகளுக்காகவும் பிரபலமானது.
ஒவ்வொரு வசந்த காலத்திலும் (பெரும்பாலும் ஆகஸ்ட் நடுப்பகுதி மற்றும் செப்டம்பர் நடுப்பகுதியில்) பூக்கும் ஆயிரக்கணக்கான வகையான காட்டுப் பூக்கள் இந்தப் பகுதியை ஒரு வண்ணக்கடல் போல் மாற்றுகின்றன. இங்கு 5 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை வழித்தடம் மற்றும் இரண்டு இயற்கை நடைபாதைகள் உள்ளன. இங்கு பூக்கும் பருவத்தின்பொழுது மட்டுமே ஸ்கில்பேட் பகுதியை பார்வையாளர்கள் பார்வையிட முடியும்.
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அருகாமையில் உள்ள நாமாகுவாலாந்து பாலைவனம், வசந்த காலத்தில் அதன் காட்டுப் பூக்கள், கனிம வளம் மற்றும் கலாசார வரலாறு ஆகியவற்றால் பிரபலமானது. இது சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். நமக்வா கடற்கரையும், ஆரஞ்சு நதிக்கரையும், அவற்றின் மலையேற்றப் பாதைகள் மற்றும் சாலைக்கு வெளியே செல்லும் பாதைகளுக்கு மிகவும் பிரபலமானவை.
பாலைவனம் என்றாலே வறண்டு காணப்படும். ஆனால், Namaqualand பாலைவனம் குளிர் காலத்தில் ஒரே இரவில் பூக்களால் நிரம்பி விடும். இங்குள்ள பல அரிய தாவர இனங்கள் பூமிக்குக் கீழே வறட்சியை தாங்கிக்கொண்டு உறக்க நிலையில் இருக்கும். ஆனால், இவை குளிர்காலத்தில் மழை பெய்ததும் ஈரப்பதத்தை உறிஞ்சி ஒரே இரவில் முளைத்து பூக்களின் தோட்டமாக மாறிவிடுகிறது. இந்த அரிய காட்சியை ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டுமே பார்க்க முடியும்.
வருடத்தின் பெரும்பகுதியில் நமக்வாலாந்தின் வறண்ட நிலப் பரப்பில் கடினமான புதர்களைத் தவிர, மிகக் குறைந்த தாவரங்களே காணப்படுகின்றன. இருப்பினும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், குளிர்கால மழைக்குப் பிறகு காட்டுப் பூக்கள் மற்றும் டெய்சி மலர்கள், அல்லிகள், கற்றாழை மற்றும் வற்றாத மூலிகைகள் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4,000 தாவர இனங்கள் வளர்கின்றன. இந்த சமயத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமிருக்கும்.
உலகில் வேறு எங்கும் வளராத ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகையான பூக்கள் இங்குள்ளன. பல வகையான சதைப்பற்றுள்ள தாவரங்கள் அதிகம் உள்ளன. உலகின் மிகச்சிறிய ஆமையான புள்ளிகள் கொண்ட பேட்லோப்பரை பூங்காவில் காணலாம். பல வகையான பூச்சி இனங்கள் இங்குள்ள பூக்களால் ஈர்க்கப்படுகின்றன. 21 குடும்பங்களைச் சேர்ந்த சிலந்திகள், வெளிர் ஆரஞ்சு, மஞ்சள் தேள் போன்றவை இங்கு காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.