சுற்றுச்சூழலின் நண்பர்களான சுறா மீன்களைப் பாதுகாப்பதன் அவசியம் தெரியுமா?

ஜூலை 14, சுறா விழிப்புணர்வு தினம்
சுறா மீன்
சுறா மீன்
Published on

சுறா மீன்கள் கடல்வாழ் உயிரினங்களில் முக்கியமானவை. விஞ்ஞானிகள் அவற்றை வாழும் புதைவடிவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவை மரங்கள் மற்றும் டைனோசர்களை விட மிகவும் பழைமையானவை. 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் சுற்றித் திரிந்தவை. பல அழிவுகளில் இருந்தும் தப்பிப் பிழைத்துள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் சுறாக்கள் மனிதர்களால் கொல்லப்படுகின்றன என்பது வேதனையான விஷயம்.

சுறாக்கள் ஏன் கொல்லப்படுகின்றன?

வேட்டையாடும் மனிதர்கள்: உலகெங்கும் 1970ம் ஆண்டிலிருந்து சுறாக்களின் எண்ணிக்கை அதிவேகமாக 71 சதவீதம் வரை குறைந்துள்ளது. சுறாக்களின் தோல் இறைச்சி மற்றும் துடுப்புகளுக்காக மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன.

சிறப்பு சுறா சூப்: ஷார்க் ஃபின் சூப் என்பது சீனா, தைவான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வழங்கப்படும் ஒரு சூப் வகை. மிகவும் சுவையான சூப் தயாரிக்க சுறாக்களின் துடுப்புகள் பயன்படுகின்றன. எனவே, அதற்காக கொல்லப்படுகின்றன. இந்த சூப்கள் பொதுவாக திருமணங்கள் மற்றும் விருந்துகள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் ஒரு ஆடம்பரப் பொருளாக வழங்கப்படுகிறது.

பிற காரணங்கள்: சுறாக்கள் அவற்றின் இறைச்சி, கல்லீரல் எண்ணெய், குருத்தெலும்பு மற்றும் உடலின் பிற பாகங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. பொழுதுபோக்குக்காக மீன்பிடிப்பவர்களால் விளையாட்டுக்காக கொல்லப்படுகின்றன. மேலும், பிரபலமான நீச்சல் கடற்கரைப் பகுதிகளில் மனிதர்களை அச்சுறுத்தும் என்ற காரணத்திற்காக தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொல்லப்படுகின்றன.

சுறா விழிப்புணர்வு தினம்: ஒவ்வொரு வருடமும் ஜூலை 14ம் தேதி அமெரிக்காவில் சுறா விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், உலகம் முழுவதும் சுறாக்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

சுறாக்கள், சுற்றுச்சூழலின் நண்பர்கள்: சுறாக்கள் அழிவது சுற்றுச்சூழலில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். சுறாக்கள் மற்ற கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்கும். அதனால் கடல் ஆரோக்கியமும் கட்டுக்குள் இருக்கும். சுறாக்கள் கடல் ஆமைகளை வேட்டையாடும். அவை கார்பன் சேமிப்பிற்கு முக்கியமான கடல் புல்லை சாப்பிடுகின்றன. கடல் ஆமைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கார்பன் ஸ்டோர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். இது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த தீங்கு விளைவிக்கும்.

சுறாக்களை பாதுகாக்கும் வழிகள்:

1. அதிகப்படியான மீன் பிடிப்பதை தடுக்க வரம்புகளை நிறுவ வேண்டும்.

2. சுறா துடுப்புகளின் வர்த்தகத்தை தடை செய்தல்.

3. மீன் பிடித்தலில் தடை செய்யப்பட்ட கடல்சார் பாதுகாப்பு பகுதிகளை உருவாக்க வேண்டும்.

4. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் சுறாக்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

5. சுறாக்களுக்கு மாற்றான கடல் உணவு வகைகளை ஊக்குவிக்க வேண்டும்.

6. புலம் பெயர்ந்த சுறா வகைகளை பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட வேண்டும்.

7. அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் போன்ற சுறா பாதுகாப்பு மீது கவனம் செலுத்தும் உலகளாவிய ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகளை ஆதரித்தல்.

8. சுறாக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல். சுறாக்களின் எண்ணிக்கை மற்றும் மீன் வளத்தை கண்காணித்தல். சுறா பாதுகாப்பு முயற்சிகளில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துதல். சுறா மீன் பிடித்தலை நம்பியுள்ள சமூகங்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை வழங்குதல்.

இத்தகைய செயல்பாடுகள் மூலம் சுறா மீன்களின் பாதுகாப்பிற்கும், அவற்றின் உயிர் வாழ்வை உறுதி செய்வதற்கும் விரிவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com