மூங்கில் நமது வாழ்வியலோடு ஒன்றிணைந்த ஒரு தாவரம். மூங்கிலைப் பற்றிய சில அரிய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
மூங்கில் தாவரங்களின் அரிய அம்சங்கள்:
மூங்கில் இனங்கள்: உலகம் முழுவதிலும் சுமார் 1200 மூங்கில் இனங்கள் உள்ளன. 138 வகையான மூங்கில் இனங்கள் இந்தியாவில் உள்ளன. மணிப்பூரில் மட்டும் 53 வகையான மூங்கிலும், அருணாச்சலப் பிரதேசத்தில் 50 மூங்கில் இனங்களும் காணப்படுகின்றன.
விரைவான வளர்ச்சி: மூங்கில் பல அரிய மற்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஒரு தாவரக் குழுவாகும். உலகின் மிக வேகமாக வளரும் தாவரம் மூங்கில். 100 அடி உயரத்துககு மேல் வளரக்கூடிய ராட்சத இனங்களும் இதில் உண்டு. சில வகை மூங்கில்கள் உகந்த சூழ்நிலையில் ஒரே நாளில் 250 சென்டி மீட்டர் வரை வளரும். இந்த விரைவான வளர்ச்சி தாவர ராஜ்யத்தின் ஈடு இணையற்றது என்று சொல்லலாம்.
பூக்கும் சுழற்சி: பெரும்பான்மையான தாவரங்களைப் போல தினமும் பூக்காமல் வருடத்திற்கு ஒரு முறையும் பூக்காமல், சில மூங்கில் இனங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூக்கும். சில வகையான மூங்கில் பூக்கள் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் வழக்கமுடையன. மூங்கில்கள் வற்றாத புற்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
வலிமை மற்றும் நெகிழ்வு: மூங்கில் இலகு ரகத்தைச் சேர்ந்த தாவரமாக இருந்தாலும் நம்ப முடியாத அளவிற்கு வலிமையானது. பல எஃகு கலவைகளை விட மூங்கில் அதிக வலிமையைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாசாரங்களில் மூங்கில் கட்டுமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, மூங்கில் மிகவும் நெகிழ்வானது. அதிகக் காற்று அல்லது பூகம்பத்தின்போது அழுத்தத்தின் காரணமாக உடைந்து விடாமல் வளைந்து போகிறது.
மீளுருவாக்கம்: மரங்களைப் போல் அல்லாமல், மூங்கில் அறுவடைக்குப் பிறகு விரைவாக மீளுருவாக்கம் செய்கிறது. ஏனென்றால், அது தண்டுக்கிழங்கு வேரமைப்பிலிருந்து வளர்கிறது. இது மீண்டும் நடவு செய்யாமல் தொடர்ந்து அறுவடை செய்ய அனுமதிக்கிறது.
சிக்கலான வேர் அமைப்பு: மூங்கில் நிலத்தடி வேர் தண்டுக்கிழங்குகளில் இருந்து வளரும். அவை கிடைமட்டமாகப் பரவி, புதிய தளிர்களை உருவாக்குகின்றன. இவை அடர்த்தியான காலனிகளை உருவாக்க அனுமதிக்கிறது. இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒரு வலிமையான அமைப்பாக இது உள்ளது.
குல்ம் உறைகள்: மூங்கில் தளிர்கள் பாதுகாப்பு உறைகளால் மூடப்பட்டிருக்கும். இந்த உறை செடி முதிர்ச்சி அடையும்போது உதிர்ந்து விடும். இந்த மூங்கில் உறைகள் தனித்துவமானவை. பூச்சிகள் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளிலிருந்து இளம் தளிர்களை பாதுகாக்க இது உதவுகிறது. இவற்றில் அதிகளவு சிலிகா உள்ளது. இவை மூங்கிலின் வலிமை மற்றும் கடினத்தன்மைக்கு காரணமாக அமைகிறது. பிற புற்களுடன் ஒப்பிடுகையில், பூச்சிகள் மற்றும் அழுகலை மூங்கில் அனுமதிக்காது.
மூங்கிலின் பயன்பாடுகள்: மூங்கில் தண்டுகள் எரிபொருளாகவும், மரமாகவும் வீடுகள், வேலி உபகரணங்கள் மற்றும் வயல் கருவிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆசியாவிலேயே மிக உயரமான வீடுகளை அமைப்பதற்காக தொழிலாளர்கள் மூங்கில் சாரக்கட்டுகளை பயன்படுத்துகின்றனர்.
ஃபிலோஸ்டாச்சிஸ் பாம்புசாய்ட்ஸ் போன்ற மூங்கில்களின் தண்டுக்குள் காணப்படும் 'தபஷீர்' என்ற மூங்கிலின் சுரப்பு, ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும், சிகிச்சைகளில் குளிர்ச்சியான டானிக்காகவும், இருமல் மற்றும் மூச்சுக்குழாய் ஒவ்வாமைகளை சமாளிக்கவும் பயன்படுகிறது.
இந்த உயிரினத்தின் தளிர்கள் மற்றும் விதைகள் மக்களுக்கு உணவை வழங்குகின்றன. தண்டுகள் மற்றும் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும், தொப்பிகள், கூடைகள், பொம்மைகள், இசைக்கருவிகள், தளவாடங்கள், சாப்ஸ்டிக்ஸ், காகிதம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றன.