நிலச்சரிவின் நிஜக் காரணம் என்ன தெரியுமா?

நிலச்சரிவு பேரழிவு
நிலச்சரிவு பேரழிவு
Published on

‘கடவுளின் தேசம்’ என்று கேரளாவை கூறுவார்கள். சமீபத்தில் இங்கு ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை வார்த்தைகளாலும் எழுத்துகளாலும் சொல்லிட முடியாது. பொதுவாக, இயற்கை எப்பொழுது சீர்குலையத் தொடங்குகிறது தெரியுமா? அதன் இயல்பு தன்மையை நாம் மாற்றி அமைக்கும்பொழுதுதான், அது நம் மீது சீறிப்பாய்ந்து தாக்குதல் நடத்துகிறது என்று கூறினால் மிகையாகாது. நிலச்சரிவுகள் எப்படி நிகழ்கின்றன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பூமிக்கடியில் இருக்கும் பாறைகள், மணற்பரப்புகள் திடீரென நகர்வதால் ஏற்படும் விளைவே நிலச்சரிவாக இருக்கிறது. இதிலும், மலைப்பாங்கான இடங்களில் கற்கள் மற்றும் மணற்பிடிப்புகள் நகர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு புவியியல், உருவவியல் மற்றும் தட்பவெட்பம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாது, நீரியல் மாற்றங்கள், நிலநடுக்கம் போன்ற புறக்காரணங்களும், தவிர மனித செயல்பாடுகளும் காரணமாக இருந்துவிடுகின்றன.

பொதுவாக, பனி மலைகள் உருகுவது, அதீத மழைப்பொழிவு, மணல் அரிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன. இவற்றோடு சேர்ந்து இயற்கை சூழலில் மனித செயல்பாடுகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஒரு நிலச்சரிவு ஏற்பட, அதீத மழையோ, நிலநடுக்கம் போன்ற காரணிகள் இருந்தாலும், பல சமயங்களில் மேற்குறிப்பிட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களின் கூட்டு விளைவுகளால்கூட நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.

புவியியல் காரணம் என்று பார்க்கும்போது, ஓரிடத்தில் இருக்கும் மணற்பரப்பு, பாறை போன்றவை வலுவிழப்பது, பாறைத்தட்டுகள் பலவீனப்படுவது போன்றவற்றைக் குறிக்கும். ஓரிடத்தில் ஆழ வேறூன்றும் மரங்கள் இல்லாத சமயத்தில், பூமிப்பரப்பு மிகவும் இளகுவாக இருக்கும்போது நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும், அதிக மழைப்பொழிவு போன்றவை எளிதில் நிலச்சரிவுக்கு வழிவகுக்கின்றன.

கேரளாவின் நிலச் சரிவு பேரழிவு
கேரளாவின் நிலச் சரிவு பேரழிவு

உருவவியல் என்று பார்த்தால், நிலத்தின் உருவம், அமைப்பைப் பொறுத்து இருக்கின்றன. இதிலும், வறட்சி போன்ற காரணங்களால் தாவரங்களின் பிடிப்பு அகலும்போது மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு போன்றவை ஏற்படுகின்றன. இதில், மனிதர்களின் செயல்பாடுகளும் நிலச்சரிவுக்கு பெரும் காரணங்களாக அமைகின்றன. பூமியில் உயிர்கள் உருவாகுவதற்கு முன்பாகவே தோன்றிவிட்ட மேற்கு தொடர்ச்சி மலை, மிகவும் வலிமையான மலையாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சண்டிபுரா வைரஸின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!
நிலச்சரிவு பேரழிவு

வலிமையான பாறைகளைக் கொண்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நிலச்சரிவு ஏற்படுகிறது என்றால், ரெசார்ட், அணைகள், சாலைகள், ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை அமைத்தது முக்கியக் காரணமாகும். மனிதர்கள் செய்யும் தவறுகளால் இப்படிப்பட்ட பாதிப்புகள் தொடர்கிறது.

சூழலியல் ரீதியாக, மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் மனித ஆக்கிரமிப்பு, இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளைத் தவிர்ப்பது ஒன்றுதான் இதுபோன்ற பேரழிவுகளை தவிர்க்க நாம் எடுக்கும் முன்னெடுப்பாக இருக்கும் என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

இனியாவது இயற்கைக்கு தொந்தரவு செய்யாமல் அது வழியில் அது போகட்டும், நம் வழியில் நாம் செல்வோம் என சென்று நம்மையும் இயற்கையையும் காப்பாற்றுவோம். நிலச்சரிவால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான கேரள சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com