

உலகில் சிலியில் உள்ள 5,484 ஆண்டுகள் பழைமையான அலர்ஸ் மரம், தற்போது கண்டறியப்பட்ட தனி மரங்களில் உலகின் மிகப் பழைமையானதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் மிக வயதான மற்றும் பெரிய மரம் இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ‘ஜூனிபெரஸ் பாலிகார்’ என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் பென்சில் சிடார் மரம்தான். இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பசுமையான மரமாகும்.
தனித்துவமான பென்சில் போன்ற வடிவத்திற்குப் பெயர் பெற்ற இந்த மரம், எந்தவொரு நிலப்பரப்பிற்கும் அழகியல் மதிப்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தின் லாகல் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள உதாய்பூர் எனும் கிராமத்தில் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தின் மலைப்பகுதியில் காணப்படும் பென்சில் சிடார் மரங்கள்தான் இந்தியாவின் பழைமையான மரங்கள் என கார்பன் டேட்டிங் ஆய்வுபடி இதன் வயது 2032 இருக்கலாம் என்கிறார்கள், இது பற்றி இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்திய ஹைதராபாத் VATA புவுண்டேசன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் லாகல் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே இந்த வகை பென்சில் சிடார் மரங்கள் வளர்க்கப்படுகின்றன என்கிறார்கள். இவைதான் இந்தியாவின் பழைமையான மரங்கள் என்கிறார்கள். இதற்கு முன்னர் போட்டோ கார்பன் டேட்டிங் முறையில் உலகெங்கும் உள்ள 125 பழைமையான மரங்களை பற்றி ஆய்வு செய்து பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, பென்சில் சிடார் 8 மீட்டர் முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும், அகலமான கிரீடத்துடன் (மரத்தின் மேல் அமைந்துள்ள அகண்ட கிளைகள் கொண்ட பகுதி) 6 மீட்டர் அகலம் வரை வளரும். அதன் இயற்கையான வாழ்விடத்தில் இது 15 மீட்டர் முதல் 20 மீட்டர் உயரம் வரை 8 மீட்டர் அகலமான கிரீடத்துடன் வளரக் கூடியது. உருளை வடிவ மரத்தின் தண்டு சாம்பல் முதல் பழுப்பு நிறமாகவும், நேராகவும், மெல்லியதாகவும், 50 செ.மீ. விட்டம் வரையிலும் இருக்கும். பென்சில் சிடார் ஒரு கடினமான, மிக வேகமாக வளரும் மரமாகும். இது அதன் முதல் ஆண்டில் 3 மீட்டர் வளர்ச்சியை அடையக் கூடும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மெதுவாகவே இதன் வளர்ச்சி இருக்கும்.
இந்திய சிடார் மரங்களின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று அதன் நீண்ட ஆயுள். சில மரங்கள் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழக் கூடியவை. இந்திய சிடார் மரம் அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் சிதைவை எதிர்க்கும் தன்மைக்காக மிகவும் மதிக்கப்படுகிறது. இது கட்டுமானம், தளவாடங்கள் தயாரித்தல் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் உற்பத்தியில் கூட பிரபலமான தேர்வாக அமைகிறது.
அனைத்து மரங்களைப் போலவே, இந்திய சிடார் மரங்களும் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி சேமித்து, காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவுகின்றன. இந்த மரம் பல்வேறு பறவைகள், பூச்சிகள் மற்றும் பாலூட்டிகளுக்கு வாழ்விடமாக செயல்படுகிறது. இது இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களிக்கிறது.
இந்திய சிடாரின் விரிவான வேர் அமைப்பு மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, பொதுவாக மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் நிலத்தடி நீர் சேமிக்கவும் உதவுகிறது இவ்வகை மரங்கள்.