தேசிய புவியியல் அந்தஸ்து பெற்ற பாரம்பரிய ஏரி எது தெரியுமா?

lonar lake
lonar lake
Published on

தேசிய மலர், தேசியப் பறவை, தேசிய விலங்கு வரிசையில் தேசிய புவியியல் நினைவுச் சின்னம் ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா? மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்திலிருந்து நான்கு மணி நேர பயண தொலைவில் உள்ள உலோனாரில் அமைந்த உலோனார் ஏரி (Lonar crater lake) தான் தேசிய புவியியல் நினைவுச்சின்னம் ஆகும். இந்த ஏரியை 1823ம் ஆண்டில் சி.ஜே.இ.அலெக்சாண்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி அடையாளம் கண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கந்தப் புராணம், பத்மப் புராணம், ஐன்-ஐ-அக்பரி போன்ற பண்டைய நூல்களில் இந்த ஏரி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது விண்கல் அல்லது சிறுகோள் ஒன்று மோதியதால் உருவானது இந்த ஏரி என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். லோனார் ஏரி சுமார் 500 அடி ஆழம் கொண்ட முழுமையான முழு வட்ட வடிவத்தில்  காட்சியளிக்கிறது. 113 ஹெக்டேர் அளவு கொண்ட இது லோனார் பள்ளம் எனவும் அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் இந்த ஏரி நீரை ஆய்வு செய்யும்போது, ​​அதிக அழுத்தம், உயர் வெப்ப நிலையின்போது உருவாகும் மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களைக் கண்டுபிடித்தனர். 2020ல் இந்த ஏரியின் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி பலருக்கும் ஆச்சரியம் தந்துள்ளது. இந்த ஏரி நீர், இயற்கையாக உப்பும் காரமும் சேர்ந்த ஒரு நீர்நிலையாகும். பாறைகளில் இருக்கும் ரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. உலகில் உள்ள பசால்ட் பாறை மீது விண்கல் மோதி உருவான நான்கு ஏரிகளில் இதுவும் ஒன்று. மற்ற மூன்று பசால்ட் குழிப்பள்ளங்கள் தென்பிரேசில் நாட்டில் உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன.

புவியியலாளர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இயற்கைவாதிகள், வானியலாளர்கள் என பலரும் இந்த ஏரியின் பல்வேறு கூறுபாடுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஏரி 1979ம் ஆண்டில் 'தனித்துவமான புவியியல் தளம்' என அறிவிக்கப்பட்டு 'தேசிய பாரம்பர்ய நினைவுச் சின்னம்' என்ற அந்தஸ்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
இந்த 6 உணவுகளை சாப்பிட்டதும் தப்பித் தவறிக் கூட தண்ணீர் குடித்து விடாதீர்கள்! 
lonar lake

ஏரியின் கரையோரத்திலேயே தானியங்கள், மக்காச்சோளம், வெண்டை, வாழை மற்றும் பப்பாளி ஆகியவை பயிரிடப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளிலிருந்து தண்ணீர் வருகிறது.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 'ராம்சர் மாநாடு' என்ற அமைப்பினால்  உலக முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநில பகுதிகளில் ஒன்றாக இந்தியாவில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 40 சதுப்பு நில பகுதிகள் வரிசையில் இந்த ஏரியும் ராம்சர் பகுதி என அறிவிக்கப்பட்டு இதைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் சர்வதேச நிதி உதவி பெறுவது சிறப்பு. தற்போது இந்த ஏரி உலக பல்லுயிர், புவியியல் மற்றும் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com