மனிதர்களைப் போலவே சில விலங்குகளுக்கும் வண்ணப்பார்வை குறைபாடு ஏற்படுவதன் காரணம் தெரியுமா?

விலங்குகளின் வண்ணப்பார்வை குறைபாடு
விலங்குகளின் வண்ணப்பார்வை குறைபாடு
Published on

ண்ணப்பார்வை குறைபாடு (Color blindness) அல்லது வண்ணக் குருட்டுத் தன்மை என்பது ஒரு குறிப்பிட்ட நிறங்களை வேறுபடுத்துவதில் தனி நபர்கள் சிரமப்படும் ஒரு நிலையாகும். பொதுவாக சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களில் வேறுபாட்டை கண்டறிவதில் சில மனிதர்கள் சிரமப்படுவார்கள். இது பல்வேறு வகையான வண்ணக் குழப்பங்களுக்கு வழி வகுக்கிறது.

மனிதர்களுக்கு ஏன் வண்ணக்குறைபாடு பிரச்னை ஏற்படுகிறது?

பொதுவாக, ஒரு மரபணு மாற்றத்தால் மனிதர்களுக்கு வண்ணக் குறைபாடு ஏற்படுகிறது. இது விழித்திரையில் உள்ள கூம்புகளை பாதிக்கிறது. பெண்களை விட ஆண்களுக்கு நிற வேறுபாடுகளை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் மட்டுமே உள்ளது. ஆனால், பெண்களுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. எனவே, அவர்களுக்கு ஆண்களை விட நிறங்களைப் பிரித்தறியும் திறன் அதிகமாக இருக்கும். மேலும், முதுமை, கண் நோய்கள் விழித்திரை அல்லது பார்வை நரம்புக்கு சேதம் ஏற்பட்டாலும் வண்ணப் பார்வை குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.

விலங்குகளின் வண்ணக்குறைபாடு: மனிதர்களைப் போலவே சில விலங்குகள் சில வகையான வண்ணக் குருட்டுத் தன்மையை அனுபவிக்கின்றன. அவற்றின் கூம்பு செல்களில் (வண்ணப்பார்வைக்குக் காரணமான ஒளிச்சேர்க்கைகள்) குறைபாடுகள் காரணமாக குறிப்பிட்ட வகை வண்ண குருட்டுத் தன்மையை பெற்றிருக்கின்றன. விலங்குகள் பெரும்பாலும் இயற்கையால் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வண்ண நிறமாலையை கொண்டுள்ளன.

நாய்கள் மற்றும் பூனைகள்: நாய்கள் மற்றும் பூனைகள் நிறத்தை பெரிதாக நம்பாமல், வாசனையால் வேட்டையாடப் பழகியுள்ளன. இவை நிறக்குருடு கொண்டிருக்கின்றன. இவற்றுக்கும் நீலம் மற்றும் மஞ்சள்  நிறங்கள் மட்டுமே கண்ணில் தெரிகின்றன. சிவப்பு, பச்சை போன்றவை அவற்றுக்குத் தெரியாது.

பசுக்கள் மற்றும் குதிரைகள்: இவை இருநிறப் பார்வை குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை வேறுபடுத்துவதற்கு அவை திணறுகின்றன.

பறவைகள்: பறவைகளில் வண்ணக் குருட்டுத் தன்மை அரிதானது. அவை விலங்கு ராஜ்ஜியத்தில் மிகவும் நவீன வண்ண பார்வையைக் கொண்டுள்ளன.  மனிதர்களை விட உயர்ந்த பார்வைத் திறன் கொண்டவை. மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத புற ஊதா ஒளி உட்பட நான்கு வகையான கூம்புகளை இவற்றால் காண முடியும். இருப்பினும், சில இரவு நேர பறவைகளான ஆந்தை போன்றவை குறைவான வண்ண பார்வை கொண்டவை.

ஊர்வன: பல்லிகள் மற்றும் ஆமைகள் போன்றவற்றால் பரந்த அளவிலான வண்ணங்களைக் காண முடியும். பறவைகளைப் போலவே இவற்றிற்கும் புற ஊதா ஒளியைக் கண்டறியும் தன்மை உண்டு. தவளைகள் மற்றும் தேரைகள் நல்ல வண்ணப் பார்வை கொண்டவை.

இதையும் படியுங்கள்:
கோஜி பெரி பழத்திலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
விலங்குகளின் வண்ணப்பார்வை குறைபாடு

பாம்புகளுக்கு மோசமான வண்ணப்பார்வை திறன் உண்டு. ஆனால், அகச்சிவப்பு ஒளிக்கு அதிக உணர்திறன் கொண்டவை. எனவே, தாங்கள் தேடும் இரையின் உடலில் இருந்து வெளிப்படும்  வெப்பத்திலிருந்து அவை இருக்கும் இடத்தை கண்டறிகின்றன.

மீன்கள்: மீன்களுக்கும் பரந்த அளவிலான வண்ணப்பார்வை திறன் உள்ளது. மனிதர்களால் காண முடியாத வண்ணங்களை கூட மீன்களால் காண முடியும். சில வகையான மீன்கள் அவை வாழும் சூழலின் அடிப்படையில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வண்ணப்பார்வை கொண்டிருக்கலாம். உதாரணமாக, ஆழ்கடல் மீன்கள் நிறங்களைக் காட்டிலும் ஒளி அளவை கண்டறிவதில் திறன் வாய்ந்தவை.

பூச்சிகள்: தேனீக்கள் போன்ற பூச்சிகளால் பெரும்பாலும் புற ஊதா ஒளியை பார்க்க முடியும். பூக்களை கண்டறிவது போன்ற செயல்களுக்கு அவற்றின் வண்ணப்பார்வை மிகவும் முக்கியம். மேலும், சிவப்பு நிறம் அவற்றின் கண்களுக்கு கருப்பு நிறமாகத் தோன்றும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com