
மின்னணு கழிவு மேலாண்மை(e-waste management) என்பது பயன்படுத்த முடியாத பழைய மின்னணு சாதனங்களை பாதுகாப்பான முறையில் சேகரித்து, மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்தும் செயல் முறையை குறிக்கும். இது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதுடன் மதிப்பு மிக்க உலோகங்களை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
மின்னணு கழிவு என்றால் என்ன?
பயன்படுத்த முடியாத பழைய அல்லது பழுதான மின் மற்றும் மின்னணு சாதனங்கள், மின்னணு கழிவுகள் எனப்படுகின்றன. இவை கணினிகள், மொபைல் போன்கள், பிரிண்டர்கள், மின் இசைக் கருவிகள், காமிராக்கள், கால்குலேட்டர்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் போன்ற பல வடிவங்களில் இருக்கலாம்.
அவற்றால் ஏற்படும் பாதிப்புகள்
காப்பரிலிருந்து 'டையாக்சின்' எனும் நச்சுப்பொருள் வெளியேறுகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் 'டாக்சி சயனைடு' என்னும் நச்சுப் பொருளை வெளியேற்றுகின்றன. மின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம் மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலவீனப்படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது.
கருவுறுதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளில் கலந்துள்ள 'சல்பர்' மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது. பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இந்த திடக்கழிவுகள் சுற்றுச்சூழலின் தன்மையை வெகுவாக பாதிக்ன்றன.
மின்னணு கழிவு மேலாண்மையின்(E-waste management) முக்கியத்துவம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மின்னணு கழிவுகளில் உள்ள காரீயம், பாதரசம், குரோமியம், காட்மியம் போன்ற நச்சுப் பொருட்கள் மண்ணிலும் நீரிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். எனவே, இவற்றை முறையாக அப்புறப்படுத்துவதன் மூலம் இந்த பாதிப்பை குறைக்க முடியும்.
மனித ஆரோக்கியம்
உபயோகமற்ற மின்னணு கழிவுகளில் இருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி மனிதர்களுக்கு புற்றுநோய், நரம்புத்தளர்ச்சி, கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இவை மண்ணையும், நீரையும், காற்றையும் மாசடைய செய்யும். நச்சுப் பொருட்கள் மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் இவற்றை பாதுகாப்பாக சேகரித்து, மறுசுழற்சி செய்து, அப்புறப்படுத்தும் பாதுகாப்பான கழிவு மேலாண்மை அவசியம்.
வளங்களை மீட்டெடுத்தல்
மின்னணு கழிவுகளில் இருந்து இரும்பு, தாமிரம், தங்கம் போன்ற பல மதிப்புமிக்க உலோகங்களை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்ய முடியும். அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சியும், விழிப்புணர்வும் கிடைக்க செய்திட வேண்டும்.
மின்னணு கழிவு மேலாண்மை வழிமுறைகள்
பொது மக்களிடையே மின்னணு கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மின்னணு கழிவுகளை சேகரிக்க பாதுகாப்பான இடங்களை அமைப்பதும், மின்னணு கழிவுகளை கட்டுப்படுத்தவும், மறுசுழற்சி செய்ய தொழில்துறையினரை ஊக்குவிக்கவும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறுசுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.
கழிவுகளை பிரித்தெடுத்து அவற்றை மீண்டும் உபயோகிக்க அல்லது மறுசுழற்சி செய்ய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த முடியாத மின்னணு பொருட்களை சரியான முறையில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
நச்சுத்தன்மையுள்ள மின்னணு கழிவுகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மனித உடல்நல பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.