வளிமண்டலத்தில் உள்ள பசுமை நிற வாயுக்கள், நாம் வசிக்கும் பூமியின் வெப்பநிலையை உயர்த்துகின்றன. உலகின் மேற்பரப்பின் வெப்பநிலை 1.2 டிகிரி சென்டிகிரேட் அதிகரித்துள்ளதாகச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வெப்பநிலை அதிகரிப்பது இப்படியாகத் தொடர்ந்தால் 2040ம் வருடம் முதல் 2070ம் வருடத்துக்குள் இந்த வெப்பநிலை 2.0 டிகிரியைத் தாண்டும் என்றும், அது நாம் வாழுகின்ற பூமிக்கு ஆபத்தானது என்பதும் வல்லுநர்கள் கருத்து.
பசுமை நிற வாயுக்கள் என்பது கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைட்), மீதேன் ஆகியவற்றை உள்ளடக்கியது. பூமியில் இயற்கையாகவே, கரியமில வாயு உள்ளது. பல ஆயிரம் வருடங்களாக உலகில் 1 மில்லியனுக்கு 280 பாகங்கள் என்று இருந்த கரியமில வாயு, தொழில் புரட்சிக்குப் பின் 1 மில்லியனுக்கு 390 பாகங்கள் என்று உயர்ந்து காணப்படுகிறது. நம்முடைய வசதியான வாழ்க்கைக்கு மின்சாரம், வாகனங்கள் என்று பல அத்தியாவசியமானத் தேவைகள் இருக்கின்றன. மக்கள் தொகை அதிகரிக்கும்போது மின்சாரம், வாகனங்கள், தொழிற்சாலைகள் என்று தேவைகளும் அதிகரிக்கின்றன.
பூமியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற எண்ணெய் வளங்கள், இயற்கை எரி வாயு ஆகியவை மின்சாரம் உற்பத்தி செய்ய பயன் படுத்தப்படுகின்றன. மின்சாரத்தைத் தருகின்ற நேரத்தில் இவை கரியமில வாயுக்களையும் வெளியேற்றுகின்றன. உதாரணத்துக்கு நிலக்கரியானது, ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 1,020 கிலோ கிராம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. எண்ணெய் வளங்கள் 758 கிலோ கிராம் மற்றும் இயற்கை எரி வாயு, 515 கிலோ கிராம் கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. நீர் சக்தி, சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் ஆகியவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினால் இந்த பாதிப்பு குறைவு. ஒவ்வொரு நாடும் வெளியேற்றும் கார்பன் அளவை, ‘கார்பன் ஃபுட் பிரின்ட்’ (கரியமில வாயு தடம்) என்பார்கள். இதனை மெட்ரிக் டன் என்ற அளவில் குறிப்பிடுகிறார்கள். 1000 கி.கிராம் – 1 டன், 1 மில்லியன் டன் – 1 மெட்ரிக் டன்.
2020ம் ஆண்டு கணக்குப்படி, உலகில் அதிகமாக கரியமில வாயு வெளியேற்றும் நாடுகளில் சீனா முதலிடத்திலும் (11,680.42 மெட்ரிக் டன்), அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் (4535.3 மெட்ரிக் டன்), இந்தியா மூன்றாவது இடத்திலும் (2411.73 மெட்ரிக் டன்) இருக்கிறது. இந்த மூன்று நாடுகளிலும் ஜனத்தொகை அதிகம். ஆகவே, மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு, அந்த நாட்டு மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டு, நாட்டு மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் கரியமில வாயு வெளியேற்றம் எத்தனை என்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை ஆங்கிலத்தில், ‘பர் கேபிடா’ என்பார்கள். இதன்படி சீனா 28வது இடத்திலும் (பர் கேபிடா 8.20 டன்), அமெரிக்கா 13வது இடத்திலும் (13.68 டன்), இந்தியா 110வது இடத்திலும் (1.74 டன்) இருக்கிறது. வளைகுடா நாடுகள் முதல் ஆறு இடங்களில் இருக்கின்றன.
கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நீர் சக்தி, சூரிய சக்தி, காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரம் அதிகரிக்கப்பட வேண்டும். மின்சாரம் உற்பத்தி செய்ய நிலக்கரி உபயோகிப்பதை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும். வாகனங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும், பேட்டரியில் ஓடும் வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உலகத்துக்கு வழிகாட்டியாக நம்முடைய அண்டை நாடான பூடான், கரியமில வாயு வெளியேற்றத்தை ஜீரோவாகக் குறைத்து, கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்திய முதல் நாடாக உள்ளது. இதைப்போலவே இந்து மகா சமுத்திரத்தில் உள்ள கொமொரோஸ், மத்திய ஆப்ரிக்காவிலுள்ள காபோன் ஆகிய நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்தி விட்டன.
2020ம் வருடம், பூடானின் கரியமில வாயு தடம் 1.46 மெட்ரிக் டன் ஆக இருந்தது. பூடானில் 70 சதவிகிதம் காடுகள். கரியமில வாயுவை முற்றிலும் குறைப்பதற்கு காடுகள் பராமரிப்பில் கவனம் செலுத்தியது, இயற்கை விவசாயம், நீர் சக்தியிலிருந்து மின்சாரம் ஆகியவை உதவியது. பூடானுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், நிலையான அபிவிருத்திக்கும் பூடான் அரசு சுற்றுலா பயணிகளிடமிருந்து 200 டாலர் கட்டணம் வசூலிக்கிறது.