
சிலந்தி வலைகளைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால், டைனோசர்கள் தோன்றுவதற்கும் கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் பூமியில் ஒரு பிரம்மாண்ட சிலந்தி வாழ்ந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட சில அடிச்சுவடுகள், இந்த வியக்கத்தக்க ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆம்! சுமார் 260 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய சிலந்தியின் கால்தடங்களே அவை.
1968-ம் ஆண்டு, தொல்லுயிர் ஆராய்ச்சியாளரான ரேமண்ட் எம். ஆஃப் (Raymond M. Alf) என்பவர்தான் இந்தக் கண்டுபிடிப்புக்கு வித்திட்டார். அரிசோனா பாலைவனத்தில் இருந்து அவர் நுட்பமான, கிண்ணம் போன்ற அச்சிட்ட கால்தடங்களை கண்டுபிடித்துள்ளார்.
ஈரமான மணலில் அந்தப் பிரம்மாண்ட சிலந்தி (Spider) மெதுவாக நடந்து சென்றபோது, அதன் தடங்கள் அப்படியே படிந்து, மணல் இறுகியபோது கல்லாக மாறியுள்ளன.
இந்தக் கால்தடங்கள், இன்றைய டாரன்டுலா (Tarantula) சிலந்தியின் (Spider) அளவுக்கு இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தப் புதைபடிவத்தில் உள்ள கால்தடங்கள் எந்த உயிரினத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிய, உயிருள்ள சிலந்திகளின் கால்களில் மையைப் (Ink) பூசி, காகிதத்தில் ஓடவிட்டுப் பார்க்கப்பட்டது. அந்த அச்சு, புதைபடிவத்தின் கால்தடங்களுடன் துல்லியமாகப் பொருந்தியதாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவியலாளர் கிறிஸ்டா சாட்லர் (Christa Sadler), இதனை மேலும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்தார். அவர் டாரன்டுலாக்கள் மற்றும் தேள்களை மணல் ஓடுபாதையில் நடக்கவிட்டு, அதன் கால்தடங்களையும், அசைவுகளையும் ஆய்வு செய்தார். அதன் விளைவாக இந்தத் தடங்கள் ஒரு டாரன்டுலா அளவுள்ள சிலந்தியுடையவைதான் என உறுதியானது.
இந்தக் கால்தடங்கள், பெர்மியன் காலத்தைச் (Permian Period) சேர்ந்தவை. முதல் டைனோசர்கள் தோன்றுவதற்கு 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சிலந்தி இது.
அந்தக் காலத்தில், இன்றைய அரிசோனா ஒரு பரந்த பாலைவனமாக இருந்தது. அங்கே, அந்தச் சிலந்தி (Spider) நடந்து சென்ற ஒரு சில விநாடிகள், இன்று பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் கல்வெட்டாகஉறைந்து போயுள்ளன. தற்போது, ரேமண்ட் எம். ஆஃப் அருங்காட்சியகத்தில்இருக்கும் இந்தக் கால்தடங்கள், பூமி வரலாற்றின் அரிய ஒரு சான்றாகும்.
டைனோசர்கள் வருவதற்கு முன்பே, இந்தச் சிலந்திகள் இந்தப் பூமியில் கால்தடம் பதித்துவிட்டன என்பது எத்தனை பெரிய ஆச்சரியம்! நாம் வாழும் பூமி இன்னும் எவ்வளவு பெரிய ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறதோ? உங்கள் கருத்து என்ன?