ஓசோன் என்ற வாயு பிராண வாயுவின் மூன்று அணுக்களைக் கொண்டது. ஓசோன் நல்லதா, கெட்டதா என்றால் இரண்டும்தான் என்று சொல்ல வேண்டும். நிலத்தடியிலிருந்து சுமார் 8 கி.மீ. முதல் 18 கி.மீ. உயரம் உள்ள வளி மண்டலத்தை அடியடுக்கு மண்டலம் அல்லது வெப்ப மண்டலம் என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் (Troposphere). இந்த அடியடுக்கு மண்டலத்தில் ரசாயனச் சேர்க்கையால் உருவாகின்ற ஓசோன் வாயு, மனிதனின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது.
போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் பலதரப்பட்ட வாகனங்கள், மின் நிலையங்கள், தொழிற்சாலை கொதிகலன்கள் ஆகியவை, அதிக அளவில் ஆவியாகும் கரிம சேர்மங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த வாயுக்கள் நைட்ரஜன் ஆக்சைடுடன் சேர்ந்து, சூரிய ஒளியில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றங்களினால், ஓசோன் உருவாகின்றது. இதனை சுவாசிப்பதால், இதய வலி, தொண்டையில் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, மூச்சுக் குழாயில் அடைப்பு போன்ற நோய்கள் உண்டாகின்றன. மனிதன் நோயற்ற வாழ்வு வாழ இவ்வகையான ஓசோன் உருவாவதை நிறுத்தவும், முடிந்த அளவு கட்டுப்படுத்தவும் வேண்டும்.
இந்த வெப்ப மண்டலத்துக்கு மேலே சுமார் 50 கி.மீ. உயரம் வரை இருக்கும் வளி மண்டலம், அடுக்கு மண்டலம் எனப்படும். ஆங்கிலத்தில் ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) என்பார்கள். இங்கு பூமியிலிருந்து சுமார் 20 முதல் 30 கி.மீ. உயரம் வரை இருப்பது ஓசோன் படலம். சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் வளி மண்டலத்திலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து ஓசோன் உருவாகிறது. இந்த ஓசோன் படலம் புற ஊதா கதிர்கள் பூமியை சென்றடையாமல் பாதுகாக்கின்றன. இந்த புற ஊதா கதிர்களினால் சரும நோய்கள், புற்று நோய், கேடராக்ட் என்னும் கண்புரை நோய் ஆகியவை உருவாகின்றன. மேலும், இந்த ஓசோன் படலம், பூமியின் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இந்த ஓசோன் படலத்தை, ‘பூவுலகின் குடை’ என்பார்கள். இதனால், இந்த ஓசோன் நல்ல ஓசோன். காப்பாற்றப்பட வேண்டியது. ஆனால், பூமியின் சுற்றுச் சூழலில் மாசு அதிகரிக்கும்போது, அது ஓசோன் படலத்தை பாதிக்கிறது.
1970களின் பிற்பகுதியில் ஏர்கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏரோசல் குப்பிகளில் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், ஓசோன் படலத்துக்கு சேதத்தை விளைவிப்பதாக விஞ்ஞானிகள் நிரூபணம் செய்தனர். மேலும், அண்டார்டிகாவில் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அதிக அளவிலான புற ஊதா கதிர்கள் பூமியை அடைந்ததாகவும் கண்டறியப்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு 1985ம் வருடம் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான உலக நாடுகள் இடையேயான ஒப்பந்தம் வியன்னாவில் கையெழுத்தானது.
வியன்னா உடன்படிக்கையின் தொடர்ச்சியாக, கனடாவின் மாண்ட்ரியல் நகரில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், 197 உலக நாடுகள் கலந்து கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த உடன்படிக்கை, ‘மாண்ட்ரியல் ப்ரோடோகால்’ எனப்படும். அதாவது, மாண்ட்ரியல் நெறிமுறை. இந்த உடன்படிக்கையின் நோக்கம், புற ஊதா கதிர்களிலிருந்து பூமிக்கு கவசமாக இருக்கும் ஓசோன் படலத்தை பாதுகாத்தல், அதன் சிதைவுக்கு காரணமாக இருக்கும் ரசாயனப் பொருட்களின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்துதல், இந்த ரசாயனப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தடை செய்தல் ஆகியவை. இந்த ஒப்பந்தம் 1989ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
உலக நாடுகள் ஒருமித்த கருத்தோடு அங்கீகரித்த இந்த, ‘மாண்ட்ரியல் நெறிமுறை’ சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த உடன்படிக்கையின்படி, ஒரு சில ரசாயனப் பொருட்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது அறவே நிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொது சபை, ‘மாண்ட்ரியல் நெறிமுறை’ கையெழுத்திடப்பட்ட செப்டம்பர் 16ம் தேதியை, ‘ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம்’ என்று 1994ம் வருடம் அறிவித்தது.