அழிந்து வரும் ஆப்பிரிக்க யானைகள்!

Endangered African elephants.
Endangered African elephants.

ப்பிரிக்க யானைகள் அதன் கம்பீரமான தோற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க புத்திசாலித்தனத்துக்காக அறியப்பட்ட இனமாகும். பல நூற்றாண்டுகளாக பறந்து விரிந்த ஆப்பிரிக்க கண்டத்தின் அடர்ந்த காடுகளை இவை அலங்கரித்து வந்த நிலையில், இன்று இவை அழிவின் விளிம்பில் நிற்கின்றன.  வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் மனிதனுக்கும் விலங்குகளும் இடையேயான மோதல்கள் போன்ற அச்சுறுத்தல்களால் இந்த நிலைக்கு இவை தள்ளப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க யானையின் முக்கியத்துவம்: ஆப்பிரிக்காவின் சாவன்னா மற்றும் காடுகளில் சுற்றித் திரியும் இந்த வகை யானைகள், பிரம்மாண்ட தோற்றம் கொண்டு நம்மை பிரம்மிக்க வைக்கும் உயிரினங்கள் மட்டுமல்ல, இவற்றின் இருப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தாவரங்களின் மீதான இவற்றின் தீராத பசியின் காரணமாக, இவை அதிக இடங்களை உருவாக்குகின்றன. அதாவது, இவை உட்கொள்ளும் தாவரங்களின் விதைகள் அவற்றின் சாணம் மூலம் காடு முழுவதிலும் சிதறடிக்கப்படுவதால், இத்தகைய யானைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிக்க அவசியமாகும்.

இந்த அற்புதமான ராட்சத தோற்றம் கொண்ட யானைகள் பல ஆப்பிரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க கலாச்சாரம் மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளது. இவற்றைக் காண்பதற்காகவே உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆப்பிரிக்காவுக்கு படையெடுக்கின்றனர். இதனால் இந்த நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் உயர்கிறது. இந்த யானைகளின் இருப்பு பல்லுயிர் பெருக்கத்துக்கு மட்டுமல்ல, எண்ணற்ற சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியமாகிறது.

ஆப்பிரிக்க யானைகளின் ஆபத்தான நிலை: இந்த யானைகள் உயிர் வாழ்வதற்கான முக்கியத்துவம் இருந்தபோதிலும், அவை பல கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இவற்றில் முதன்மை அச்சுறுத்தலாக இருப்பது வேட்டையாடுதல் ஆகும். சட்டவிரோதமான தந்த வர்த்தகத்தால் இந்த அற்புதமான உயிரினங்கள் அர்த்தமற்று படுகொலை செய்யப்படுகின்றன. இதனாலேயே பெரும்பாலான யானை குடும்பங்கள் சிதைந்து போயின.

மேலும், மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், இவற்றின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, யானைகள் குறுகிய மற்றும் குறைவான வளங்களைக் கொண்ட இடங்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் மனிதர்கள் வாழும் பகுதிக்கு யானைகள் நுழைந்தால், மனிதர்களுக்கும் யானைகளுக்கும் மோதல் ஏற்பட்டு அதைக் கொன்று விடுகிறார்கள்.

பாதுகாப்பு முயற்சிகள்?: ஆப்பிரிக்க யானைகள் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பது மோசமான நிலையாகத் தோன்றலாம். ஆனால். இயற்கை ஆர்வலர்கள், அரசாங்கங்கள் மற்றும் சில அமைப்புகளின் முயற்சியால் ஆப்பிரிக்க யானை இனங்களை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. யானைகள் வாழும் பகுதிகளில் அவற்றுக்கான நிலையான நிலப் பயன்பாட்டை சரியாக திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம், மனித - யானை மோதலை தடுக்க முடியும். யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதற்கு ரோந்து பணிகளில் வனச்சரகர்களும், பாதுகாவலர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி அழிவின் நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க யானைகளை பாதுகாக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு தனி மனிதனும், இவை நம் பூமியில் இருப்பதற்கான முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட்டால், மிச்சம் இருக்கும் சொற்ப யானைகளையாவது பாதுகாக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com