சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைக் கட்டடங்கள்!

Environmental friendly green buildings.
Environmental friendly green buildings.

சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகள் அதிகரித்து வரும் இந்த காலத்தில், நம் வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களையும் சரியாக பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான விஷயங்களில் கட்டுமானத்துறையும் ஒன்று. எனவே, இதை சரி செய்வதற்கு பசுமைக் கட்டடங்களை ஊக்குவிப்பதே சரியானது எனக் கூறப்படுகிறது.

பசுமைக் கட்டடம் என்றால் என்ன?: எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குடியிருப்பவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்டுமான முறைதான் இந்த பசுமைக் கட்டடம். இது நிலையான பொருட்களின் பயன்பாடு, சிறந்த வடிவமைப்பு மற்றும் கழிவுகளைக் குறைத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய கட்டட முறையாகும். மின்சாரத்திற்கு இதில் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படும்.

இத்தகைய கட்டடங்களைக் கட்டுவதற்கு குறைந்த ஆற்றலை பயன்படுத்துவதன் மூலமாக, கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வை குறைக்க முடியும். மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத பொருட்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக, பல நன்மைகள் ஏற்படுகின்றன. உதாரணத்திற்கு இந்த கட்டுமான முறைக்குப் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் மறுசுழற்சி மற்றும் புதுப்பித்தல் சார்ந்த பொருட்களாகவே உள்ளன.

இந்தக் கட்டடங்கள் சிறந்த காற்றோட்டத்துடன் வடிவமைக்கப்படுவதால் அதில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் வசதி மேம்படுகிறது. மேலும், இதில் கழிவுகளைக் குறைப்பதற்கான கவனமான திட்டமிடல் மற்றும் சரியான முறையில் செயல்படுத்தப்படும் மறுசுழற்சி மூலமாக கழிவுகள் குறைக்கப்படுகின்றன. 

பசுமைக் கட்டடத்தின் முக்கியத்துவம்: இத்தகைய கட்டடங்களால் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைக்கலாம். நல்ல திறனுள்ள நிலையான பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக, காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு இந்தக் கட்டடங்களால் நிலைத்து நிற்க முடியும். குறிப்பாக, சோலார் பேனல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் இருப்பதால், கார்பன் உமிழ்வு மேலும் குறைக்கப்படுகிறது.

இத்தகைய கட்டடங்களின் ஆரம்ப செலவு சற்று அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்துடன் ஒப்பிடும்போது பலன் தரும் முதலீடாக இது உள்ளது. எரிசக்தி சேமிப்பு, வரிச்சலுகை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் ஆகியவை பசுமைக் கட்டடங்களை நிதி ரீதியாக சிறப்பானதாக மாற்றுகிறது.

பசுமைக் கட்டடங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை சூழலுக்கு அதிகம் பங்களிக்கிறது. சிறந்த காற்றின் தரம், இயற்கை வெளிச்சம் மற்றும் வசதியான உட்புற வெப்பநிலை ஆகியவற்றால் அதில் வசிப்பவர்கள் திருப்தியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்கின்றனர்.

இவை சராசரி கட்டடங்களை விட நீண்ட காலம் நீடித்திருக்கும் தரத்தில் கட்டப்படுகின்றன. இவற்றால் தீவிர வானிலை நிகழ்வுகளைக் கூட தாங்க முடியும். இதனால் செலவுகள் வெகுவாகக் குறைவது மட்டுமின்றி, காலநிலை தொடர்பான சவால்களும் எதிர்கொள்ளப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்துகிறது.

பசுமைக் கட்டடத்தை நோக்கிய கட்டுமான துறையின் மாற்றம், மனிதனின் அறிவாற்றல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பூமியை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் சான்றாகும். எனவே, நீங்கள் இனி எவ்விதமான கட்டடம் கட்ட விரும்பினாலும், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் பசுமைக் கட்டட முறையை பின்பற்றினால், அது வளமான உலகிற்கு வழிவகுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com