

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலைக் குன்று தமிழகத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பியூர் அருகே அமைந்துள்ளது. பல்வேறு வாழ்விடங்கள், தாவரங்கள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இங்கு மலை அடிவாரக்காடு, இலை உதிர் காடு, முட்புதர் காடு, பாறைப் பகுதி மற்றும் நன்னீர் சுனை போன்ற பல்வேறு வாழ்விடங்கள் உள்ளன.
பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் என்பவை தனித்துவமான மற்றும் நலிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆதரிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகும். இவை அரிய, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் முக்கிய நலிந்த இனங்களை பாதுகாக்கின்றன. நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும் மற்றும் இடம்பெயர்ந்து வரும் பறவைகள், உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஒரு முக்கிய வாழ்விடமாக உள்ளது.
இங்கு 135 வகையான பறவைகள், 138 தாவர இனங்கள் மற்றும் பல விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பறவைகள் ஆய்வில் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வெகு தூரம் பயணித்து வலசை வந்திருக்கும் பறவைகள் வாழ்வது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நெடுந்தூர வலசை பறவைகளான சாம்பல் கழுத்து கூம்பலகன், நீலப் பூங்குருவி, மரக்கதிர் குருவி, சேற்று பூனைப்பருந்து, வெண்தொண்டை காட்டுக் கதிர் குருவி ஆகியவை இந்த ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாம்பல் கழுத்து கூம்பலகன்: தமிழ்நாட்டில் அரிதாகக் காணக்கூடிய சாம்பல் கழுத்து கூம்பலகன் (Grey nacked Bunting) பறவையை நாகமலை குன்றில் காண முடிகிறது. இதன் உருவ அமைப்பு சிட்டுக்குருவியை போன்றிருக்கும். வெளிர் பழுப்பு உடல், இளஞ்சிவப்பு கூம்பு போன்ற அலகு, வெண்ணிற கண் வளையம் போன்றவற்றைக் கொண்டு இவற்றை அடையாளம் காண முடியும்.
இவை பாறைப் பாங்கான குன்றுகள், புல்வெளிகள் போன்ற திறந்தவெளிகளை வாழ்விடமாகக் கொண்டு, தாவரங்களின் விதைகள், தண்டுப் பகுதிகள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. இவை மத்திய ஆசியா, மேற்கு ஆசியா, மங்கோலியா, சீனா உள்ளிட்ட பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும். குளிர் காலத்தில் தென்னிந்திய பகுதிகளுக்கு வலசை வரும் பறவையாகும்.
நீலப் பூங்குருவி (Blue Rock Thrush): தெற்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இனப்பெருக்கம் செய்யும் இந்தப் பறவைகள் குளிர்காலங்களில் நாகமலை குன்றுக்கு தொடர்ந்து வலசை வருகின்றன. ஆண் பறவை தலையும் கன்னமும் தொண்டையும் நீல நிறத்தில் இருக்கும். மீதமுள்ள உடலின் மேற்பகுதி நீலமும் கருப்பும் கலந்து காணப்படும்.
பெண் பறவை பழுப்பாகவும், வயிற்றுப் பகுதியில் வெளிறிய திட்டுக்களுடனும், வரிகளுடனும் காணப்படும். பாறைப் பாங்கான பகுதிகளில் வாழும் இந்த நீலப் பூங்குருவிகள் பூச்சிகள், பல்லிகள், தவளைகள், தேரைகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுகின்றன. இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனைப் பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.