அரிசியை வேகவைக்கமால் சாதமாக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? சோக்குவா அரிசி என்றழைக்கப்படும் ஒரு ரக அரிசியை சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்தாலே, அது சாதமாக மாறிவிடுமாம். இந்த ரக அரிசியை போகா சால் (Boka Saul) அரிசி என்றும் அழைப்பதுண்டு. இந்த மேஜிக் அரிசியானது, அஸாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரால் உணவுக்காக விளைவிக்கப்படுகிறது.
இது அஸாம் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்த அரிசியை சமைக்க வேண்டாமாம். இதற்கு நெருப்போ, வட்டிக்காட்டவோ அல்லது கொதிக்க வைக்கவோ தேவையில்லை. 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்களுக்கு குளிர்ந்த நீரில் ஊறவைத்தால் ஆறின சாதமாக மாறிவிடுமாம். அதையே, வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தால் சூடான சாதமாக மாறிவிடுமாம். அதனை அப்படியே சாப்பிடலாம் என்கிறார்கள்.
போகா சால் அரிசி, பிரம்மபுத்திரா நதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்படுகிறது. டின்சுகியா, தேமாஜி, திப்ருகார் மற்றும் அஸாமின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. நடவு செய்ததில் இருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுறதாம்.
பெரும்பாலும், ராணுவ வீரர்கள் தொலைதூர இடங்களுக்கு செல்லும்போதோ அல்லது கடினமான நிலப்பரப்புகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போதோ இந்த மேஜிக் அரிசியை தங்களுடன் எடுத்துச் சென்று ஊறவைத்துச் சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக, நாம் பயன்படுத்தும் அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் அதிக அளவில் காணப்படும். ஆனால், மேஜிக் அரிசி எனப்படும் இந்த போகாசால் அரிசியில் கார்போஹைட்ரேட்டுடன் 10.73% நார்சத்தும் (Fibre), புரதச்சத்தும் உள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளது. இதிலுள்ள நார்ச்சத்து, மெதுவான செரிமானத்திற்கு வழிவகுத்து ஆற்றலைப் பெற உதவுவதாக சொல்லப்படுகிறது.
வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் சமையல் செய்வது என்பது ஒரு சிக்கலான செயலாக கருதப்படுகிறது. இந்நிலையில், மேஜிக் அரிசி ஒரு வரப்பிரசாதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், மக்கள் அதிக உடலுழைப்பில் ஈடுபாடாத இன்றைய காலகட்டத்தில், இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொள்வது, அவர்களின் செரிமானத்திற்கு ஏற்றதாக அமையுமா? என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.