ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Published on

விவசாய விளைபொருட்களில் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும், வருமானம் ஈட்டவும் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மழையின்மை மற்றும் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையிலும், குடும்ப தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு வருமானம் ஈட்டவும் விவசாயிகள் விவசாயத்துக்கு இணையாக கால்நடைகள் வளர்ப்பிலும் அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர். சமீப காலங்களில் விளைவித்த விளைபொருட்களில் போதிய அளவு வருமானம் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டாலோ உடனே அறுவடை செய்து அல்லது ஆடுகளை மேய விட்டு அவற்றை கால்நடை தீவனங்களாக விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் கால்நடை வளர்ப்புக்கு ஆகும் தீவன செலவு பெருமளவு குறைகிறது. இவற்றை உணர்ந்து விவசாயிகள் வெள்ளாடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

வெள்ளாடுகள் அதிக லாபம் தருபவையாக இருப்பதினாலும் அதிக அளவிலான இனப்பெருக்கம், இறப்பு விகிதம் குறைவு போன்ற காரணங்களாலும் பெரும்பான்மையான விவசாயிகள் வெள்ளாடு வளர்ப்பைப் பிரதான தொழிலாக மாற்றி வருகின்றனர். ஆடுகள் உணவுக்கு அதிகம் பயன்படுவதால் நல்ல விலைக்குப் போகின்றன. ஒரு கிலோ ஆட்டுக்கறி 800 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகளுக்கு அதிகளவிலான லாபம் ஆடு வளர்ப்பின் மூலம் கிடைக்கிறது.

மேலும், இதற்கான பராமரிப்பு செலவு, நோய் பாதிப்பு, தீவன செலவு குறைவு ஆகிய காரணிகளும் ஆடு வளர்ப்பை நோக்கி விவசாயிகளை தள்ளுகின்றன. மேலும் 100 ஆடுகள் வளர்க்க 50 அடி நீளத்தில், 45 அகலத்தில் கொட்டகை அமைத்தால் போதுமானது. நான்கு ஏக்கரில் பசுந்தீவனம் இருந்தால் 100 ஆடுகளுக்கு அது போதுமானதாக இருக்கிறது. மேலும், விவசாயிகள் விளைவிக்கக்கூடிய முக்கிய பயிர்களோடு, ஊடுபயிராக தீவனங்களை பயிரிட்டும் தீவன செலவை குறைக்கலாம்‌. ஊடுபயிராக 6 முதல் 8 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டால் 100 ஆடுகள் வளர்க்க போதுமான தீவனங்கள் கிடைக்கும்.

100 ஆடுகள் வளர்த்தால் 3 ஆண்டுகளில் அது 600 ஆடுகளாகப் பெருகும். மேலும், 500 ஆடு இருக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். ஒரு ஆட்டை 5,000 முதல் 7,000 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். பராமரிப்பு செலவு தீவன செலவுகள் போக, 65 சதவீதம் லாபம் ஈட்ட முடியும். அதுமட்டுமின்றி, ஆண்டுக்கு நான்கு முறை ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினால் நோய்களிலிருந்து பெருமளவில் ஆடுகளை பாதுகாக்க முடியும். இவ்வாறு மார்ச், ஏப்ரல் மாதத்தில் கால்வாய் நோய் தடுப்பூசி, ஜூன், ஜூலை மாதத்தில் பி பி ஆர் தடுப்பூசி, ஆகஸ்ட் மாதத்தில் கால்வாய் நோய் தடுப்பூசி, அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி நோய் தடுப்பூசி ஆகியவை ஆடுகளுக்கு கட்டாயம் செலுத்த வேண்டும்.

ஆடுகள் பராமரிப்புக்கு கூலிக்கு வேலை ஆட்களை அதிகம் வைக்க தேவையில்லை. 100 ஆடுகளை பராமரிக்க ஒரு நபர் இருந்தாலே போதுமானது என்பதாலும், அதிக லாபம் தரக்கூடியதாக இருப்பதாலும் வெள்ளாடு வளர்ப்பில் தற்போது விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றனர்.

செம்மரி ஆடு வளர்ப்பிலும் குறிப்பிட்ட அளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, குர்பானிக்காக செம்மரி ஆடுகள் அதிகம் வாங்கப்படுவதால் செம்மரி ஆடு வளர்ப்பும் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாகவே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com