லாபம் தரும் காய்கறிகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம்!

லாபம் தரும் காய்கறிகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம்!

போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால் விவசாயிகள் நீண்ட கால பயிர்களுக்கு பதிலாக குறுகிய கால தோட்டப் பயிர்களை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் குறுகிய கால தோட்டப் பயிர் விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய கடுமையான பருவ நிலை மாற்றத்தின் காரணமாக வடகிழக்கு பருவமழை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் நீண்ட கால பயிர்களான சம்பா மற்றும் தாளடி பயிர்களை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம், விளைநிலங்களை பயிரிடாமல் வைத்திருக்கும் விவசாயிகளும், தற்போது தோட்டப் பயிர்களை பயிரிடத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு பதிலாக தோட்டப் பயிர்களான காய்கறிகள், வெண்டைக்காய், சுரைக்காய், பாகற்காய், கத்திரிக்காய் போன்ற தோட்டப் பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மரக்காணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் ஏரி, குளங்கள் நீரின்றி காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் போர்வெல்கள் மூலமாகவும், சொட்டு நீர் பாசனங்கள் மூலமாகவும் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். மேலும், விளைவிக்கப்படும் காய்கறிகள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.

அதேநேரம், தற்போது தோட்டப் பயிர்களுக்கு மாறி இருக்கும் விவசாயிகளும் பூச்சி தாக்குதலால் தோட்டப் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதனால், தோட்டக்கலை துறை சார்பாக வழங்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை மானியத்தோடு தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com