விவசாயிகளே! தேமோர் கரைசல் தயாரிக்கலாம் வாங்க!

Natural Fertilizer
Agriculture
Published on

விவசாயத்தில் மகசூலை அதிகரிக்க செயற்கை உரங்களை நாடுவதை விட இயற்கை உரங்கள் சிறந்தது. இதன்மூலம் மண் வளத்தையும் நம்மால் பாதுகாக்க முடியும். அவ்வகையில் மொட்டு உதிர்தலைத் தடுக்க உதவும் தேமோர் கரைசலை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

ஒளிச்சேர்க்கையை அதிகரிக்க உதவும் தேமோர் கரைசல், பயிர்களுக்கு இலை வழியாக ஊட்டச்சத்துகளை அளிக்கிறது. இந்தக் கரைசல் வேர்களை விட மிக எளிதாக மொட்டுகளை அடைந்து விடும் என்பதால், மொட்டு உதிர்தலைத் தடுக்கிறது. நம்மால் மிக எளிதாக வீட்டிலேயே இரண்டு வழிகளில் தேமோர் கரைசலைத் தயாரிக்க முடியும்.

தயாரிப்பு முறை 1:

தேவையான பொருள்கள்:

தேங்காய் பால் - 1 லிட்டர்

மோர் - 1 லிட்டர்

செய்முறை:

மோர் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை தலா 1 லிட்டர் எடுத்துக் கொண்டு, ஒரு மண் பானையில் ஊற்றி நன்றாக கலக்கி வேண்டும். தேங்காய் பாலில் திப்பி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மண் பானை இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் ஊற்றி கலக்கிக் கொள்ளலாம். பிறகு காற்று புகாதவாறு இதனை மூடி, நிழலில் வைக்க வேண்டும். சுமார் 5 முதல் 6 நாட்களுக்கு இந்தக் கரைசலை அப்படியே வைத்திருந்தால் புளித்து விடும். ஒருவேளை புளிக்கவில்லை என்றால் 10 நாள்கள் வரையிலும் இந்தக் கரைசலை வைத்திருக்கலாம். அவ்வளவு தான் தேமோர் கரைசல் தயாராகி விடும். மண் பானையில் இந்தக் கரைசலை தயார் செய்தால், நுண்ணுயிர் சத்துகள் அதிகளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு முறை 2:

தேங்காய் பால், வெண்ணெய் பால் மற்றும் இளநீரை 1:1:1 என்ற விகிதத்தில் ஒரு மண் பானையில் ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். பானை 4இல் 3 பங்கு புதையும்படி ஒரு குழியை வெட்டி, அதில் பானையை வைத்து மேல் பகுதியை காற்று புகாதவாறு மூடி விட வேண்டும். இப்போது குழியில் மட்கிய உரத்தைக் கொட்டி நிரப்ப வேண்டும். காலை, மாலை என இரு வேளையும் இந்தக் கரைசலை அவ்வப்போது கிளறி விட வேண்டும். இந்தக் கரைசலை 7 நாள்கள் முதல் 10 நாள்கள் வரை அப்படியே வைத்திருந்தால் புளித்து விடும்.

இதையும் படியுங்கள்:
கெட்டுப்போன பாலில் உரம் தயாரிக்கலாமா? இது தெரியுமா?
Natural Fertilizer

பயன்படுத்தும் முறை:

ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மி.லி. தேமோர் கரைசலைக் கலந்து, பயிர்களுக்கு இலை வழியாகத் தெளிக்க வேண்டும். மழை பெய்யாத நாட்களில் மாலை நேரத்தில் தேமோர் கரைசலைத் தெளிப்பது நல்ல பலனைத் தரும். தொடக்கத்தில் வாரத்திற்கு இரண்டு முறை தெளிக்கலாம். செடிகள் பூக்கத் தொடங்கியதும், வாரத்திற்கு ஒருமுறை தெளித்தாலே போதுமானது. இந்தக் கரைசல் பொதுவாக தோட்டக்கலைப் பயிர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

வெகு விரைவில் குறைந்த பொருள் செலவில், மிக எளிதாக தேமோர் கரைசலை விவசாயிகளால் தயாரிக்க முடியும். ஆகையால், இதுபோன்ற இயற்கை உரத் தயாரிப்புக்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com