

உலகம் இன்று 'ஃபாஸ்ட் ஃபேஷன்' எனப்படும் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளது. மாதந்தோறும் புதிய வடிவங்கள், குறைந்த விலைகள், இணையவழி சலுகைகள் — இவை அனைத்தும் அளவுக்கு மீறிய நுகர்வை உருவாக்கியுள்ளன.
இன்று ஆடைகள் தேவைக்காக வாங்கப்படுவதில்லை; காட்சிக்காகவும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்களுக்காகவும் வாங்கப்படுகின்றன. ஒருமுறை அணிந்த ஆடை அடுத்த வாரம் 'பழையது' ஆகிவிடுகிறது.
நாம் அலமாரியில் இருந்து எளிதாக வெளியேற்றும் அந்த ஆடைகளின் இறுதி பயணம் எங்கே முடிகிறது தெரியுமா? அதன் கல்லறை இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் நகரத்தில் இருக்கிறது.
ஃபாஸ்ட் ஃபேஷன் உலகமும் பானிபட் நகரத்தின் மறுசுழற்சி அரசியலும்:
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் ஆடைகள், கப்பல்களிலும் லாரிகளிலும் இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றின் பெரும் பகுதி பானிபட் நகரத்தை அடைகிறது. இன்று அந்த நகரம் 'இந்தியாவின் மறுசுழற்சி தலைநகர்' என்று அழைக்கப்படுகிறது.
கிடங்குகள் முழுவதும் பழைய துணிகளின் குவியல்கள். சில ஆடைகளில் இன்னும் விலைப்பட்டைகளே தொங்கிக் கொண்டிருக்கின்றன. சில துணிகள் ஒருசில முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டதுபோல் தெரிகின்றன. அங்கு தொழிலாளர்கள் துணிகளை நிறம் மற்றும் தரத்தின் அடிப்படையில் பிரிக்கின்றனர். பின்னர் அவை இயந்திரங்களில் நொறுக்கப்பட்டு மீண்டும் நூலாக மாற்றப்படுகின்றன. அந்த நூல்களிலிருந்து பாய்கள், போர்வைகள், கம்பளிகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
வெளிப்படையாகப் பார்க்கும்போது இது சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியாகத் தோன்றலாம். "கழிவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறோம்" என்பதே இதன் முகமூடி. ஆனால் அதன் பின்னால் மனிதர்களின் உடல்நலமும் வாழ்க்கையும் மெதுவாக சிதைந்து கொண்டிருக்கிறது.
ஃபாஸ்ட் ஃபேஷன் ஆலைகளில் தொழிலாளர்களின் நுரையீரலை அழிக்கும் தூசி:
பழைய துணிகளை அரைக்கும் இயந்திரங்களில் இருந்து எழும் பருத்தித் தூசி தொழிலாளர்களின் நுரையீரலுக்குள் தினமும் புகுகிறது. தொடர்ச்சியான இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் பலருக்கும் சாதாரணமாகிவிட்டன. சிலருக்கு நுரையீரல் பாதிப்பு தீவிரமடைந்து, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோய்களாக மாறுகிறது.
பாதுகாப்பு முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடை போன்ற அடிப்படை வசதிகள் பல தொழிற்சாலைகளில் இல்லை. 'வேலை செய்யாமல் இருந்தால் குடும்பம் பசியால் தவிக்கும்; வேலை செய்தால் உடல் நலன் பாதிக்கும்' என்ற கொடூரமான சூழலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
பெரும்பாலானோர் ஒப்பந்தமற்ற தொழிலாளர்கள். காயம் அடைந்தாலும் மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும். உடல்நலம் குன்றினால் சம்பளமும் நிற்கும். வாழ்க்கைக்கும் நோய்க்கும் இடையில் அவர்கள் தினமும் போராடுகின்றனர்.
ஃபாஸ்ட் ஃபேஷன் கலாச்சாரத்தால் நஞ்சாகும் நிலத்தடி நீர்:
இந்தப் பிரச்னை தொழிற்சாலை சுவர்களுக்குள் மட்டும் சிக்கியிருக்கவில்லை. தொழிற்சாலைகளில் இருந்து வரும் இரசாயனக் கழிவுகள் திறந்த வடிகால்களில் வெளியேற்றப்படுகின்றன. அந்தக் கழிவுநீர் நிலத்தடி நீரையும் விவசாய நிலங்களையும் மாசுபடுத்துகிறது.
ஒருகாலத்தில் குடிநீராக பயன்படுத்தப்பட்ட நீர் இன்று நோய்களின் மூலமாக மாறியுள்ளது. சரும நோய்கள், அலர்ஜி, சுவாசப் பிரச்னைகள், புற்றுநோய் போன்றவை பல கிராமங்களில் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மக்கள் வாழும் பகுதிகளின் அருகே இரசாயனக் கழிவுகள் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகள் அங்கு சாதாரணமாகிவிட்டன.
'மறுசுழற்சி' என்ற பெயரில் மறைக்கப்படும் உண்மை:
உலக நாடுகள் தங்கள் ஆடை கழிவுகளை மறுசுழற்சி என்ற பெயரில் ஏழை நாடுகளுக்கு அனுப்புகின்றன. இதனால் அவர்களுடைய சுற்றுச்சூழல் சுமை குறைகிறது. ஆனால் அதன் விலையை இந்திய தொழிலாளர்களும் கிராம மக்களும் செலுத்துகின்றனர்.
இது சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல; சமூக நீதி தொடர்பான கேள்வியும் ஆகும். மலிவு விலையில் கிடைக்கும் ஒரு சட்டையின் பின்னால் யாரோ ஒருவரின் உடல்நலமும் ஆயுளும் பலியாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மறுசுழற்சி தொழில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தாலும், அது மனிதநேயமற்ற சூழலில் நடைபெறக் கூடாது. தொழிலாளர்களின் பாதுகாப்பு, மருத்துவ வசதி, நியாயமான சம்பளம் ஆகியவை அடிப்படை உரிமைகள். வளர்ச்சி என்பது தொழிற்சாலைகளின் லாபத்தில் மட்டுமல்ல; அங்கு வேலை செய்யும் மனிதர்களின் வாழ்க்கை தரத்திலும் அளவிடப்பட வேண்டும்.
ஃபாஸ்ட் ஃபேஷன் மோகத்தைக் குறைத்து இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்:
ஆடை நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக, நாமும் தேவையற்ற நுகர்வை குறைக்க வேண்டும்.
ஏனெனில், நாம் அலமாரியில் மறந்து போகும் ஒரு சட்டை, இன்னொருவரின் நுரையீரலில் தூசியாக மாறிக் கொண்டிருக்கலாம்.