‘சுற்றுச்சூழலின் நண்பன்; மனிதர்களின் எதிரி’ எந்த உயிரினம் தெரியுமா?

‘சுற்றுச்சூழலின் நண்பன்; மனிதர்களின் எதிரி’ எந்த உயிரினம் தெரியுமா?
Published on

சிறிய உயிரினம்தானே என அலட்சியப்படுத்த முடியாத உயிரினங்கள் கொசுக்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். இவை மிகவும் பழைமையானவை. 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் இவை இருக்கின்றன. இவை டைனோசர்களின் காலத்திற்கும் முந்தியவை என்று புதை வடிவ சான்றுகள் சொல்கின்றன.

பெண் கொசுக்கள் மட்டுமே கடிக்கும்: மனிதர்களைக் கடித்து பல நோய்களை பரப்புபவை கொசுக்கள். இதில் வினோதம் என்னவென்றால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களையும் விலங்குகளையும் கடிக்கின்றன. கடித்து இரத்தம் குடிக்கின்றன. அவற்றின் முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தத்திலிருந்து புரதம் தேவைப்படுகிறது. ஆண் கொசுக்கள் மிகவும் சாதுவானவை. அவை தாவரங்களில் இருந்து தேனை மட்டும் உண்கின்றன.

கொசுக்கள் பரப்பும் நோய்கள்: பூமியில் உள்ள கொடிய விலங்குகளாக கருதப்படும் அளவிற்கு பலவிதமான நோய்களை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரப்புகின்றன கொசுக்கள். மலேரியா, டெங்கு காய்ச்சல், ஜிகா வைரஸ், வெஸ்ட் நைல் வைரஸ், மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் போன்ற நோய்களை மனிதர்களுக்குப் பரப்புகின்றன.

கொசுக்களை ஈர்க்கும் கார்பன் டை ஆக்சைடு: 100 அடி தூரத்திலிருந்து நாம் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடை கொசுக்களால் கண்டறிய முடியும். மனிதர்களின் உடல் உஷ்ணம், வியர்வை மற்றும் சில உடல் நாற்றங்கள் ஆகியவற்றால் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன.

வேகமாக பறக்கும் திறன்: இவை அளவில் சிறியதாக இருந்தாலும் மணிக்கு ஒன்று முதல் ஒன்றரை மைல் வேகத்தில் பறக்கும் திறன் உடையவை. மற்ற பூச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த வேகம் மெதுவாக தோன்றினாலும் அதனுடைய இறக்கைகள் மிகவும் சிறியவை. எனவே, இதன் பறக்கும் வேகம் அதிகம்தான்.

குறுகிய ஆயுட்காலம்: கொசுக்களின் ஆயுட்காலம் குறைவு. ஆண் கொசுக்கள் பொதுவாக ஒரு வாரம் வரை வாழ்கின்றன. பெண் கொசுக்கள் சுற்றுச்சூழலை பொறுத்து ஒரு மாதம் வரை வாழ்கின்றன.

பெருகும் முறை: தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடும். கொசுக்கள் பெருகுவதற்கு ஒரு சிறிய அளவு தண்ணீர் கூட போதும். ஒரு பாட்டில் மூடியில் சேகரமாகும் தண்ணீர் கூட இவற்றுக்கு போதும். அதனால்தான் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது கொசுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுவதற்கான முக்கிய முறையாகும்.

இதையும் படியுங்கள்:
நெஞ்சுச் சளியை கரைக்க உதவும் 8 எளிய வீட்டு வைத்தியங்கள்! 
‘சுற்றுச்சூழலின் நண்பன்; மனிதர்களின் எதிரி’ எந்த உயிரினம் தெரியுமா?

பல்வேறு இனங்கள்: உலகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளன. இருப்பினும் அவை அனைத்தும் மனிதர்களை கடிப்பதோ அல்லது நோய்களை பரப்புவதோ இல்லை. மனிதர்களுக்கு நோய்களை பரப்பும் மிகவும் பொதுவான இனங்கள் ஏடிஸ், அனோபிலிஸ் மற்றும் குலெக்ஸ் ஆகும்.

கொசுக்களுக்குப் பிடித்த இரத்த வகை: மனிதர்களின் இரத்த வகை, சரும பாக்டீரியா, உடல் வெப்பநிலை மற்றும் சருமத்தில் உள்ள லாக்டிக் அமிலத்தின் அளவு போன்ற காரணிகள் ஒருவரை கடிப்பதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன. ஓ வகை இரத்தம் உள்ளவர்களை கொசுக்கள் அதிகமாக கடிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுற்றுச்சூழலின் நண்பன், மனிதர்களின் எதிரி: சுற்றுச்சூழல் அமைப்புகளில் கொசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. முதன்மையாக மற்ற விலங்குகளுக்கு உணவாக இருக்கின்றன. ஆனால், மனித ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் அதிகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com