மந்தா கதிர்கள் என்பவை மீன் இனத்தை சேர்ந்த கடல் உயிரினங்கள். அவை உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல கடல் நீரில் காணப்படும் பெரிய அழகான கதிர்கள்.
உருவ அமைப்பு: மந்தா கதிர்கள், பறந்த தட்டையான உடல்களுடன், வாயின் இரு புறமும் இரண்டு தனித்துவமான முன்னோக்கி எதிர்கொள்ளும் செபாலிக் துடுப்புகளை கொண்டுள்ளன. இவை மந்தாக்களின் தனித்துவமான தோற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. இவை வாயைத் திறந்து நீந்தும் போது நீரிலிருந்து சிறிய பிளாங்டன், மீன் முட்டைகள் மற்றும் சிறிய கடல் வாழ் உயிரினங்களை வடிகட்டி உண்கின்றன. இவற்றின் வயிற்றில் தனித்துவமான புள்ளிகள் உள்ளன. மனிதர்களின் கைரேகை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பது போல ஒவ்வொரு மந்தாக்களின் வயிற்றில் இருக்கும் புள்ளிகளும் வேறுபட்டவை.
பெயர்க்காரணமும், வகைகளும்: மந்தா என்கிற ஸ்பானிஷ் வார்த்தைக்கு போர்வை அல்லது ஆடை என்று பெயர். தட்டையான போர்வை போன்று உடலை ஒத்திருப்பதால் இவற்றுக்கு மந்தா என்று பெயரிடப்பட்டது. இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. ராட்சத மந்தா இனங்கள் பரந்த இறக்கைகள் கொண்டவை. திறந்த பெருங்கடல்களில் பயணிக்கும் திறன் கொண்டவை. மந்தா அல்ஃப்ரெடி என்பவை சிறிய மந்தாக்கள். இவை பவளப் பாறை மற்றும் கடலோர பகுதிகளில் காணப்படுகின்றன. மந்தாக்கள் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மந்தா கதிர்களின் சிறப்பம்சங்கள்: இவை தனித்துவமான கண்கவர் உடல் உயிரினங்கள் ஆகும். இவை மிகப்பெரிய கதிர்கள். ராட்சச மந்தா கதிருக்கு ஏழு மீட்டர் வரை இறக்கைகளும் ரிஃப் மந்தா கதிருக்கு ஐந்தரை மீட்டர் வரை இறக்கைகளும் இருக்கும். ஆனாலும் இது மிக அழகாக நீச்சல் அடிக்கும் திறன் பெறறவை. இவை அதிக தூரம் இடம்பெயர்ந்து தங்கள் உணவு மற்றும் துணையைத் தேடி பயணிக்கின்றன.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம்: மந்தாக்கள் ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை பிளாங்டன் இனங்களை கட்டுப்படுத்தவும் வேட்டையாடுபவர்களுக்கு உணவை வழங்கவும் உதவுகின்றன. இவை கடலின் சுற்றுச்சூழல் அமைப்பில் சமநிலையை பராமரிக்கின்றன.
கடல் சுற்றுலாவை ஊக்குவித்தல்: மாலத்தீவுகள், இந்தோனேஷியா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை மற்றும் டிரைவிங் ஆர்வலர்களை மந்தாக் கதிர்கள் ஈர்க்கின்றன. இவற்றை மையமாகக் கொண்ட நிலையான சுற்றுலா சுற்றுச்சூழலுக்கு நல்ல வருவாயையும் அதே சமயம் உள்ளூர் பொருளாதாரங்களுக்கும் பயனளிக்கிறது.
புத்திசாலித்தனம்: மந்தாக்கள் மிகவும் புத்திசாலித்தனமான மீன் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மிகப்பெரிய மூளையைக் கொண்டுள்ளன. இவை எல்லா வகையான ஷார்க் மீன்களுடனும் நட்பு பாராட்டுகின்றன. இவற்றின் சமூக நடத்தைகள், சிக்கலை தீர்க்கும் திறன்கள் போன்றவை மனிதர்கள் மீதான ஆர்வத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
மென்மையான இயல்பு: இவை மென்மையான இயல்பு கொண்டவை. அளவில் பெரியதாக இருந்தாலும் மந்தாக்கள் மனிதர்களுக்கு எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது. நன்றாக நீந்தக்கூடிய இவை கடல் உலகிற்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஆழமான தொடர்பை ஊக்குவிக்கின்றன. இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட மந்தாக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே உலக மந்தா தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மந்தா தினம்: உலக மந்தா தினம் செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த மென்மையான விலங்கினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவும், மீன்பிடித்தல் வாழ்விட அழிவு மற்றும் மாசுபாடு போன்ற மனித நடவடிக்கைகளால் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை பற்றி மக்கள் கற்பதற்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.