சுற்றுச்சூழலின் முதுகெலும்பாக செயல்படும் பூஞ்சைகள்!

Fungus
Fungus
Published on

சுற்றுச்சூழலைக் காக்க தனிமனித ஒழுக்கமும், விழிப்புணர்வும் மிகவும் அவசியமாகும். மனிதர்களைக் காட்டிலும் ஆண்டாண்டுகளாய் சத்தமின்றி சுற்றுச்சூழலைக் காத்து வரும் பூஞ்சைகள் குறித்து அலசுகிறது இந்தப் பதிவு.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று ஏகப்பட்ட நன்மைகள் கிடைத்துள்ளன. இருப்பினும் இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இருப்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இன்று எங்கு பார்த்தாலும் மலைபோல் குப்பை காட்சியளிக்கிறது. இதுவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு தான். மறுசுழற்சி செய்ய முடியாத சில பிளாஸ்டிக் கழிகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் மின் கழிவுகள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு தனிமனிதராகிய ஒவ்வொரிடத்திலும் மாற்றம் வர வேண்டும்.

முந்தைய காலங்களில் கழிவுகள் குறைவாகவே இருந்தன. இப்போதும் கூட இயற்கை கழிவுகளும், விலங்குகளின் உடல் கழிவுகளும் சிதைந்து மண்ணிற்கு வளத்தைக் கொடுக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்றேனும் நாம் சிந்தித்து இருக்கிறோமா! இயற்கை கழிவுகள் மட்கி சிதைவதற்கு எது உதவி புரிகிறது என்று நினைத்துப் பார்க்க கூட நேரமில்லாத உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழலை முதுகெலும்பாய்க் காக்கும் பூஞ்சைகள் கழிவுகளையும், குப்பைகளையும் சிதைத்து மண்ணின் வளத்தைப் பெருக்குகின்றன.

மண்ணின் வளத்தை மட்டும் தான் கூட்டுகிறதா இந்தப் பூஞ்சைகள் என்றால், இல்லை. இதை விடவும் ஒரு சிறப்பான செயலுக்கு துணையாய் நிற்கிறது. இதுவரையில் உலகில் உருவாக்கப்பட்ட கழிவுகளும், குப்பைகளும் சிதைக்கப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இப்போது நிற்கும் இடம் கூட குப்பைக் கிடங்காகத் தான் இருந்திருக்கும். குப்பைகளை சிதைத்து பூமியை சுத்தப்படுத்தும் பூஞ்சைகளை சுற்றுச்சூழலின் முதுகெலும்பு என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை.

ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் வாழுகின்ற பூஞ்சைகள், அங்கு சேரும் கழிவுகளை நொதிப்பதன் மூலம், அந்த நீர்நிலையில் பல்வேறு நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அவ்வகையில் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுமே பூஞ்சைகளுக்கு கடமைப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு காடுகள் அவசியம்!
Fungus

பூஞ்சைகள் உலகின் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கின்றன. வெயில், மழை, மற்றும் பனியைத் தாங்கும் திறன் கொண்ட பூஞ்சைகள், எப்பேற்பட்ட சூழலிலும் வாழும் வல்லமையைப் பெற்றுள்ளன. ஈஸ்ட், பெனிசிலின், காளான் போன்ற பல்வேறு வகைகளாக பூஞ்சைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை சரியாகப் பயன்படுத்தினால் எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் சில வகையான பூஞ்சைகள் ஆபத்தை விளைவிக்கக் கூடும். மனித உயிர்களை கொல்லும் அளவிற்கு விஷம் கொண்ட பூஞ்சைகளும் உலகில் உள்ளன. சில பூஞ்சைகள் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

இயற்கையை சுத்தப்படுத்தும் அற்புதமான படைப்பான பூஞ்சைகளின் துணையின்றி, பூமியை பேணிக் காக்க முடியாது. மண்ணின் வளத்தைப் பெருக்குவதால், விவசாயத்தின் வளர்ச்சிக்கும் பூஞ்சைகள் மறைமுகமாக உதவி புரிகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com