

பரிணாம வளர்ச்சியில் 47.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் தாவரங்கள் தோன்றின. ஆனால் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன. பூமியில் உயிரினங்களின் வாழ்வாதாரமாகத் தாவரங்கள் விளங்குகின்றன. அவை ஒளிச்சேர்க்கை மூலம் நாம் சுவாசிக்கும் பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) வழங்கி, கரியமில வாயுவை உட்கிரகித்து சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பராமரிக்கின்றன.
விலங்குகளைப் போலவே தாவரங்களும் சுவாசித்தல், வளருதல் மற்றும் இனப்பெருக்கம் செய்தல் போன்ற உயிர் பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றுக்கு இதயம் அல்லது மூளை இல்லையென்றாலும், தொடுதல், ஒளி மற்றும் ஒலி போன்ற வெளிப்புற தூண்டுதல்களுக்கு அவை எதிர்வினையாற்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குள் வேர்கள் மற்றும் வேதிப்பொருட்கள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் திறன் கொண்டவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம்மைச் சுற்றிலும் பலவிதமான தாவரங்கள் இருக்கின்றன. நாம் சாதாரணமாக பார்க்கும் தாவரங்களுக்கு தண்டும், வேரும் உள்ளன. வேர், மண்ணுக்கு அடியில் புதைந்திருக்கும். தண்டில், கிளைகள் பரவி இருக்கும். கிளையில் இலைகளும், பூக்களும் உள்ளன. பூக்கள் நாட்களாகி, பின்னர் கனியாகின்றன. கனியில் விதைகள் உள்ளன. விதைகளை மண்ணுக்குள் புதைத்தால், வேரும், தண்டும் உருவாகி புதுத் தாவரங்கள் முளைக்கின்றன. ஆனால், எல்லா தாவரங்களும் இந்த வரையறைக்குள் அடங்குவதில்லை.
தாவரங்களை பாசி, பெரணி, ஊசியிலை மற்றும் பூ பூப்பவை என்று நான்கு வகையாகப் பிரிக்கின்றனர். காலை வைத்தால் வழுக்கிச் செல்லும் பாசியை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை, ஈரமான பரப்பில் மெத்தென்று வளர்ந்திருக்கும். குறிப்பாக குளங்கள், குளியல் அறைகள், பெரிய மரங்களின் அடியில் இவை காணப்படுகிறது. ஒன்றிலிருந்து 10 செமீ உயரத்திற்கு வளரக்கூடியது. இவற்றுக்கு மெலிந்த தண்டும், மெல்லிய ஊசி போன்ற இலைகளும் உண்டு. ஆனால், வேர் கிடையாது. தாவரவியலில் இவற்றிற்கு 'பிரையோபைட்டா' என்று பெயர். உலகளவில் சுமார் 10 ஆயிரம் பாசியினங்கள் உள்ளன.
உலகில், நான்காவதாக தோன்றிய பூக்காத தாவரம் பெரணி. வனங்களை வளமாக வைத்திருப்பதில் இதற்கு முக்கிய பங்கு உள்ளது. மரநிழல், ஈரப்பதமான பகுதிகளில் வளரும் இவை, தண்ணீரை சேமித்து வைக்கும் தன்மை கொண்டவை. பெரணி செடிகள், மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும், மண்ணரிப்பை தடுக்கவும் இயற்கையாகவே உதவி வருகிறது. இவற்றுக்கும் தண்டு, இலைகள் உண்டு, வேர் கூட உண்டு. ஆனால் பூவும், விதையும் கிடையாது. காடுகள், மலைகள் என பல்வேறு தட்பவெப்பநிலைகளில் வளரக்கூடியது. தாவரவியலில் இவற்றுக்கு 'டெரிடோபைட்டா' என்று பெயர். உலக அளவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரணி வகைகள் உள்ளன.
நீண்டு வளரும் ஊசியிலை தாவர வகைக்கு, தண்டுகள், இலைகள், கிளைகள் உண்டு. இலைகள் ஊசி போல இருக்கும். இவற்றுக்குப் பூ கிடையாது. ஆனால், விதைகள் உண்டு. பல விதைகள் ஒன்று சேர்ந்து, கூம்பு வடிவத்தில் கொத்தாக இருக்கும். இவற்றின் தாவரவியல் பெயர் 'பிளோபைட்டா' சில நூறு தாவரங்களே இந்த வகையில் உள்ளன.
ஊசியிலை மரங்கள் என்பவை ஊசி போன்ற அல்லது செதில் போன்ற இலைகளைக் கொண்ட, கூம்பு வடிவ மரத்தாலான தாவரங்களின் ஒரு பெரிய குழுவாகும். இவை பெரும்பாலும் பசுமை மாறாத் தாவரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலான ஊசியிலை மரங்கள் ஆண்டு முழுவதும் தங்கள் இலைகளைத் தக்க வைத்துக் கொள்கின்றன. பெரும்பாலான ஊசியிலை தாவரங்கள் மரங்களாக இருந்தாலும், சில புதர்களாகவும் உள்ளன. பூக்கும் தாவரங்களுக்கு முன்பே பரிணாம வளர்ச்சி அடைந்தவை, உலகின் மிகப் பழமையான தாவரங்களில் ஒன்று. உலகில் 600-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
நாம் தினமும் பார்க்கும் பொதுவான தாவர வகைகளை பூ பூக்கும் தாவரங்கள் என்கிறார்கள். வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், விதைகள் என எல்லாமே இவற்றுக்கு உண்டு. இவற்றின் தாவரவியல் பெயர் 'மேக்னோ லியோபைட்டா'. இந்த வகையில் தான் பெரும்பாலான தாவரங்கள் உள்ளன. மிகச்சிறிய செடியில் இருந்து, மிகப்பெரிய மரங்களும், நேராக நிற்க முடியாத கொடிகளும் கூட இந்த தாவர வகையைச் சேர்ந்தது தான். இன்று பல்வேறு வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.
பருவநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆயிரக்கணக்கான தாவர இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்கிறது 'Science' இதழில் வெளியான புதிய ஆய்வு, உலகின் அறியப்பட்ட தாவர இனங்களில் சுமார் 18 விழுக்காடு, அதாவது 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர இனங்களை ஆய்வு செய்துள்ளது. இதில் 7 முதல் 16 விழுக்காடு தாவர இனங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன. சில தாவரங்கள் முற்றிலும் அழிந்துபோகும் நிலையில் உள்ளன. பருவநிலை மாற்றங்களால் அவற்றுக்கான ஏற்ற இடங்கள் குறைந்து வருவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர். பல்வேறு தாவரங்களின் இழப்பு, கரியமில வெளிப்பாடு, வனவிலங்குகள், உணவு, மருந்துகள் போன்றவற்றைப் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.