

ஆயூர்வேத மருந்துகளின் விற்பனை 2025 ம் ஆண்டு 46 பில்லியன் டாலர்கள், இதுவே 2030 ஆண்டில் 50 பில்லியனைத் தாண்டும் என்கிறார்கள். இதில் மருந்து தயாரிக்க உதவும் பெரும்பாலான மருத்துவ மூலிகைகளை வழங்குவது ஒரு மலை தான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். அந்த மலைதான் ஒடிசாவின் வரலாற்று சிறப்புமிக்க" கந்தமர்தன் மலைகள். (Gandhamardan hills)
இயற்கை மருந்தகம்"என்றும்" ஆயுர்வேத சொர்க்கம்" என்று அழைக்கப்படும் ஒடிசாவின் கந்தமர்தன் மலைத்தொடர் "பல்லுயிர் பாரம்பரிய தளம்" என்ற சிறப்பைப் பெற்றது . பர்கர் மற்றும் பாலங்கிர் மாவட்டங்கள் இரண்டையும் உள்ளடக்கிய இந்த பிரம்மிக்க வைக்கும் மலைத்தொடர் பசுமையான காடுகள், மருத்துவ தாவரங்கள் மற்றும் பழங்கால கோவில்கள் என கலவையான ரசனையை வழங்குகிறது.
ராமாயண புராணக்கதை படி, லட்சுமணனுக்கு சஞ்சீவனி சிகிச்சை அளிக்க இமயமலையில் இருந்து முழு கந்தமர்தன் மலைத்தொடரையும் எடுத்து வந்தபோது , வீரமிக்க ஹனுமான், மலையின் சில பகுதிகளை உடைத்தார், அந்தத் துண்டுகள் தான் இன்றைய மணம் மிக்க மருத்துவ தாவரங்களின் புதையலுடன் நிற்கும் கந்தமர்தன் மலைகள் என்பது வரலாறு கூறும் கதை.
இந்த மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1,005 மீட்டர் வரை உயரம் கொண்ட மலைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. பெண்டர், பூடெல், சாலிடில்லி, சத்ரதண்டி கந்தமர்தன், போட்பானி மற்றும் துட்டா ஆகியவை இந்த மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள். இந்த மலைத்தொடர் பலங்கிர் மற்றும் பர்கர் மாவட்டங்களின் எல்லையில் ஒரு இயற்கை அரணாக நிற்கிறது.
"மலைத்தொடரில் உள்ள காடுகள் வெப்பமண்டல மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள் வகையின் கீழ் வருகின்றன. 22 வற்றாத நீரோடைகளைக் கொண்ட அதன் பன்முகப் படுத்தப்பட்ட நிலப்பரப்பு காரணமாக, இப்பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டின் வளர்ச்சிக்கும் ஏற்ற சூழலை வழங்குகிறது. கந்தமர்தான் 1,500 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், கம்பிரமான புலிகள் முதல் லங்கூர் வரை 500 விலங்கு இனங்கள் மற்றும் பல வகையான மரங்கள், புதர்கள், மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவர இனங்களுக்கு தாயகமாகும்.
கந்தமர்தன் மலைகள் இயற்கை அழகை மட்டுமல்ல, பழங்கால கோயில்களால் சூழப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான வரலாறு மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. மலையின் வடக்கு சரிவில் 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ந்ருசிங்கநாத் கோயில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில், விஷ்ணுவின் அவதாரமான ந்ருசிங்கருக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. கோயிலின் அழகான சிற்பங்களும் அமைதியான சூழலும் இதை கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக ஆக்குகின்றன.
மலைகளின் தெற்கு சரிவில் அமைந்துள்ள ஹரிசங்கர் கோயில் ஹரி (விஷ்ணு) மற்றும் சங்கர் (சிவன்) ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள இயற்கை நீர்வீழ்ச்சிகள் இதன் வசீகரத்தை அதிகரிக்கின்றன. இங்குள்ள பபக்ஷய படித்துறை எனும் புனித தலம் பாவங்களைக் கழுவுவதாக நம்பப்படுகிறது. இது ஒரு பிரபலமான யாத்திரைத் தலம், குறிப்பாக பண்டிகைகளின் போது அதிகம் பேர் வருவார்கள்.
இப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க சிகிச்சை மதிப்பை கொண்ட மருத்துவ தாவர வகைகள் வளர்கின்றன. அதில் குறிப்பாக சர்க்கரை நோய், மூலநோய், செரிமான மண்டலத்தை சரி செய்யும் மருந்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்து ,குழந்தை பேறு அளிக்கும் மூலிகைகள், மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் மருந்து, பாம்பு கடி விஷ முறிவு மருந்து,எலும்பு சிகிச்சை மருந்து,காச நோய் தீர்க்கும் மருந்து போன்றவை குறிப்பிடத்தக்கவை.இம் மலையை சுற்றி பல ஆயூர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன.
அருகிலுள்ள நகரம் பாலங்கிர் ஆகும், இது சாலை மற்றும் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பாலங்கிரிலிருந்து, நீங்கள் ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது கந்தமர்தன் மலைகளை அடைய பேருந்தில் செல்லலாம். வருடத்தின் எல்லா நேரங்களும் கந்தமர்தன் மலைகளுக்குச் செல்ல சிறந்த நேரம். ஆய்வு மற்றும் மலையேற்றத்திற்கு சிறந்த நேரம்- அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சிறந்தவை, ஏனெனில் வானிலை இனிமையாகவும், பாதைகள் வறண்டதாகவும் இருக்கும்.