
மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயத்தில் புதியதொரு தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் விவசாயப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பது தான். இருப்பினும் இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் சாதகமான பலன்களை வழங்குகுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தயாரிப்பது சர்வதேச அளவிலான பெரு நிறுவனங்கள் தான். அவ்வகையில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் நமக்கு சாபமா அல்லது வரமா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன. இதற்கு தீர்வளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் மரபணு மாற்றப்பட்ட விதைகள். உலகில் முதன்முதலாக 1982 இல் புகையிலைச் செடியில் தான் மரபணு மாற்றப்பட்டது. விதையின் அடிப்படைப் பண்புகளை எவ்வகையிலும் மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, விதையின் வீரியத்தை அதிகப்படுத்தும் யுக்தி தான் மரபணு மாற்றத் தொழில்நுட்பம்.
குறுகிய காலத்திலேயே அதிக மகசூலைப் பெறவும், பூச்சித் தாக்குதலை எதிர்கொள்ளும் சக்தியைக் கொண்டதாகவும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் உருவாக்கப்படுகின்றன. ஒருசில நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்கி உலகம் முழுக்க சந்தைப்படுத்தி வருகின்றன. இந்நிறுவனங்களைத் தவிர்த்து வேறெங்கும் இந்த விதைகளை வாங்க முடியாது. மேலும் இந்த விதைகள் மறுமுளைப்புத் திறன் அற்றதாக இருப்பது விவசாயிகளுக்கு பாதகமாகவே உள்ளது. அதோடு மீண்டும் முளைக்காத விதைகளில் இருந்து உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்றதாக இருக்கக் கூடும் என்ற விவாதமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தக்காளி செடியில் 1995 ஆம் ஆண்டு மரபணு மாற்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது.
மரபணு முறையில் உருவான பி.டி. பருத்தி இந்தியாவில் 2002 ஆம் ஆண்டு அறிமுகமானது. தற்போது நாம் உடுத்தும் ஆடைகளில் இந்த பி.டி.பருத்தியில் இருந்து உற்பத்தியான காட்டன் தான் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் மரபணு மாற்றப்பட்ட 450 கிராம் பருத்தி விதைகள் ரூ.800-க்கு விற்கப்படுகிறது.
அடுத்ததாக மரபணு முறையில் உருவாக்கப்பட்ட பி.டி. கத்தரிக்காய் 2007 இல் இந்தியாவில் அறிமுகமானது. அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே பி.டி. கத்தரிக்காயை அறுவடை செய்யக்கூடாது என தடையும் விதிக்கப்பட்டது.
வளர்ந்த நாடுகள் கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஒட்டுமொத்தமாக இதுவரை 28 நாடுகளில் மரபணு விதைகள் உபயோகத்தில் உள்ளன.
மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இதனால் எதிர்மறைத் தாக்கங்களும் ஏற்படத் தான் செய்கின்றன. இந்த விதைகள் மண்ணின் தன்மையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.
எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மை, தீமை என இரண்டுமே இருக்கும். அதேபோல் மரபணு மாற்றப்பட்ட விதைகள் அதிக உணவு உற்பத்தியைக் கொடுத்தாலும், அதன் தரத்தில் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் ஹைபிரிட் உணவுப் பொருட்கள் அதிகரிப்பதற்கு காரணமும் மரபணு மாற்றப்பட்ட விதைகள்தான். பாரம்பரிய இயற்கை விவசாயம் அழிவை நோக்கிச் செல்வதற்கு செயற்கை உரங்கள் மட்டும் காரணமல்ல; மரபணு மாற்றப்பட்ட விதைகளும் ஒரு காரணம்தான்.