மண் வளத்தை மேம்படுத்தும் மகத்தான மரப்பயிர்!

Tree crop that improve soil fertility
Tree crop that improve soil fertility
Published on

னேக பள்ளிகளிலும் தோட்டங்களிலும் சுற்றிலும் பச்சைப் பசேலென்று நீளமாக வளர்ந்த ஊசி போன்ற மெலிதான மரப்பயிர்களை பார்த்திருப்போம். அதை எடுத்து ஒரு கணுவுக்குள் இன்னொன்றை நுழைத்து விளையாடியும் இருப்போம். அதுதான் சவுக்கு எனப்படும் அழகிய பயிர்.

சவுக்கு என்பது கசுவரினேசிய என்ற குடும்பத்தை சேர்ந்த  தாவர இனமாகும். சவுக்கானது தெற்காசியா, மேற்கு பசுபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டுள்ளது. குச்சிரை மரம், சாட்டை, கசை போன்றவை சவுக்கின் மற்ற பெயர்கள்.

மூன்று இன வகைகளைக் கொண்ட இம்மரங்களின் இலைகள் ஊசியிலை வகையாகும். அரிதாகவே கிளை விடும் இயல்புடைய இம்மரம், அதிகபட்சமாக 40 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. 50 ஆண்டுகள் வரை வாழும் இது வளர்ச்சிக்குத் தகுந்த சூழல் இல்லாத இடங்களில் 25 ஆண்டுகள் வரையே வளர்கிறது. கடற்கரை மணல் பகுதிகளில் மற்றும் வடிகால் அமைப்புள்ள ஈரப்பதமான மண் உள்ள பகுதிகளில் நன்கு வளர்கிறது சவுக்கு.

இப்பயிர் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் கடற்கரை பகுதிகளில் காணப்படும் இவை பல இடங்களில் இயற்கை வேலியாகப் பயன்படுத்தப்பட்டு வருவது இதன் சிறப்பு.

இம்மரம் பல வகைகளில் நமக்குப் பயன் அளிக்கிறது. வளர்ந்த மரத்திலிருந்து சிறுசிறு பர்னிச்சர்கள், விவசாயக் கருவிகள் செய்யவும், கட்டுமானப் பணிகளில் சாரம் அமைக்க தாங்கு கழிகளாகவும், சிறு வீடுகளின் கூரை மற்றும் கம்பங்களுக்கும் பயன்படுகிறது. மேலும், சவுக்கு மரத்தை வெட்டி அதை சவுக்கு கம்பங்கள், சவுக்கு கட்டைகள், வேர் கட்டைகள், சவுக்கு மிளார்கள் என்று இனம் பிரித்து விற்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவுகிறது இம்மரம்.

இத்துடன் மருத்துவ குணமும் கொண்டதாக உள்ளது சவுக்கு. இதன் இலைகள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது தனி சிறப்பாகும். இதன் விதையில் இருந்து உருவாக்கப்படும் களிம்பு தலைவலியை போக்குகிறது. காய வைத்த இலைகள் முடி உதிர்வையும் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்த உணவுகளை சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
Tree crop that improve soil fertility

இந்த மரம் கன மீட்டருக்கு சுமார் 900 முதல் 1,000 கிலோ வரை எடையுள்ளதால், சிறந்த விறகாகவும், கரி தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் கரி 34,500 அளவு வெப்பம் தரவல்லதால், அனைத்து விறகு மர இனங்களை விட சிறந்ததாகக் கருதப்படுகிறது.

காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக இதனைப் பயன்படுத்தலாம். இம்மரத்தை தோட்டங்களின் எல்லையில் காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கலாம். இம்மரத்தின் வேர்களில் காணப்படும் பிராங்கியா எனப்படும் பாக்டீரியா காற்றிலுள்ள நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாக மாற்றி நிலத்தில் சேமிப்பதால் மண்வளம் மேம்படுகிறது என்று வன ஆராய்ச்சி நிலையம் ஒன்று இதன் சிறப்புகளைத் தெரிவித்துள்ளது. இத்தகைய சிறப்பான இந்த இயற்கை வேலிகளைக் காப்பது நமது கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com