கிரேக்க புராணக் கதை - பருவங்கள் எவ்வாறு உருவாயின?

Seasons
Seasons
Published on

இயற்கையின் தெய்வம் பெண் கடவுள் டிமீட்டர். தங்க நிறக் கூந்தலுடன், பார்ப்பவர்கள் கண்ணைப் பறிக்கும் அழகு தெய்வம் என்று சொல்லலாம். அவள் வாய் திறந்து சிரித்தால், மலர்கள் பூக்கும். அவள் பார்வை பட்ட இடத்தில் செடிகள் முளைக்கும். மரங்கள் செழித்து வளரும். டிமீட்டர் விளைச்சலின் தெய்வம். பூமியின் பசுமைக்குக் காரணம் டிமீட்டர்.

டிமீட்டர், கடவுளர்களுக்கு எல்லாம் அரசனான ஜீயஸின் நான்காவது மனைவி. அவளுக்கு அழகே உருவான பெண் குழந்தை பிறந்தது. அவளின் பெயர் பெர்சிபோன். மெல்லிய கைகளும், கால்களும் கொண்ட பெர்சிபோன், வெள்ளை நிறம் கொண்டவள். அவள் செல்லுமிடமெல்லாம் மல்லிகையின் வாசனை வீசும். டிமீட்டர், தன்னுடைய மகள் மீது அதீத ஆசை வைத்திருந்தாள். பெர்சிபோன், தன்னுடைய வயதை ஒத்த தேவதைகளுடன் விளையாடித் திரிந்து வந்தாள்.

ஒரு முறை, பெர்சிபோன், தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, பாதாள உலகின் அரசன் ஹதீஸ் அவளைப் பார்த்தான். பார்த்த உடனே அவளுடைய அழகில் மயங்கிய ஹதீஸ், அவளுடைய தந்தையும், தன்னுடைய சகோதரனுமான ஜீயஸிடம் தன்னுடைய காதலை எடுத்துரைத்தான். டிமீட்டர், தன்னுடைய மகளைப் பிரிந்திருக்க விரும்ப மாட்டாள்; அவளை பாதாள உலகிற்கு அனுப்ப இசைய மாட்டாள் என்பது ஜீயஸூக்குத் தெரியும். ஆகவே, அவளைக் கவர்ந்து செல்வது ஒன்றே சிறந்த வழி என்று முடிவு செய்த ஜீயஸ், பூமியின் தாயான கையாவின் உதவியை நாடினான்.

கையா, மிகவும் அழகான பூச்செடி ஒன்றை உருவாக்கினாள். அதனுடைய மணம் நான்கு திசைகளிலும் பரவியது. பூவின் மணத்தால் கவரப்பட்ட பெர்சிபோன், பூவைத் தேடி விரைந்து வந்தாள். ஆசையுடன் பூவைப் பறித்தவுடன், பூமி பிளந்து, ஹதீஸ் அவளை பாதாள உலகுக்கு அழைத்துச் சென்று தன்னுடைய அரண்மனையில் வைத்துக் கொண்டான். மகளை பறிகொடுத்த டிமீட்டர் நிலை குலைந்து போனாள். 

டிமீட்டர் உணவு, உறக்கமின்றி மகளைத் தேடி, நிலம், கடல் எல்லாம் சுற்றினாள். தன்னுடைய கடமைகளை விடுத்து, மகளை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கினாள். இயற்கை தன்னுடைய வேலையை செய்யாத காரணத்தால், மரங்கள் பட்டுப் போயின. பசுமையான உலகம் பழுப்பு நிறமானது. பூமி குளிர்ச்சியாகி. காய்ந்து போய் செடிகள் இறந்தன. விளைச்சல் இல்லாமல் பசியும், பஞ்சமும் பூமியை வாட்டியது. பூமியின் நிலையைப் பார்த்த ஜீயஸ், கடவுள்களின் தூதரும் தன்னுடைய மகனுமான ஹெர்ம்ஸை, பாதாள உலகம் அனுப்பி, பெர்சிபோனைக் கூட்டி வரும்படி சொன்னார்.

ஜீயஸ் கட்டளைப் படி, பெர்சிபோனை அனுப்பி வைத்த ஹதீஸ், பெர்சிபோன் அறியாமல், அவளை மாதுளம் பழம் விதையைத் திங்க வைத்தார். பாதாள உலகத்தில் ஒரு சிறிது உணவு எடுத்துக் கொண்டால் கூட, வருடத்தில் சில நாட்கள் அங்கு தங்கியிருக்க வேண்டும். இதனால் வருடத்தில் நான்கு மாதங்கள் பெர்சிபோன் பாதாள உலகில் ஹதீஸின் மனைவியாகவும்,  மீதி எட்டு மாதங்கள் பூமியில் தாயுடனும் தங்க வேண்டும் என்று முடிவாகியது.

இதையும் படியுங்கள்:
தனிநபர் பயிர் காப்பீட்டை முன்னெடுக்குமா அரசு?
Seasons

ஆகவே, டிமீட்டர் மகள் பெர்சிபோனுடன் இருக்கும் வசந்தம், கோடை, இலையுதிர் காலங்களில், பூக்கள், பழங்கள், காய்கறிகள் முளைக்கின்றன. மகள் பெர்சிபோன், ஹதீஸூடன் இருக்கும் காலங்களில், மகளின் பிரிவால் டிமீட்டர் சோகத்தில் மூழ்க, குளிர் காலம் தோன்றி, பூ, பழம், கறிகாய் முளைக்காமல் பூமி வாடி நிற்கிறது.

பருவங்கள் மாறுவதை உணர்ந்த பண்டைய கிரேக்க நாட்டவர்கள், அதனை விளக்குவதற்கு, இதைப் போன்ற கதைகளை உருவாக்கி இருக்கலாம். இதைப் போன்ற கதைகளைப் பண்டைய நாகரிகம் எல்லாவற்றிலும் காணலாம்.

பூமி அதன் அச்சில் சாய்ந்து நிற்கிறது. சூரியனைப் பார்த்து இருக்கும் பூமியின் பாகங்கள் வெப்பமாகவும், சூரியனிலிருந்து தள்ளி இருக்கும் பகுதிகள் குளிராகவும் இருக்கும். பூமி, சூரியனைச் சுற்றி வரும் போது, சூரியனை நோக்கி இருக்கும் பகுதி மாறுகிறது. இதனால் தான் பருவங்கள் உண்டாகின்றன. மத்தியிலே இருக்கும் பூமத்திய ரேகை பகுதியில், சூரியனை நோக்கி இருக்கும் இடங்கள் எப்போதும் ஒரு போலவே இருப்பதால், பருவ நிலை எப்போதும் ஒன்று போலவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com