பசுமை பாலைவனமாகும் பயங்கரம்... தடுத்து போராடுவோம் - உலக சுற்றுச்சூழல் தினம் 2024!

World Environment Day
World Environment Day

1972ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ப்ளாஸ்டிக் மாசுபாடு, இயற்கை சமநிலை, சூழல் மீட்டெடுப்பு போன்ற பல மையக்கருத்துக்களுடன் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சிகளை சவுதி அரேபியா முன்னின்று நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து, "நில மறுசீரமைப்பு, பாலைவனமாதலைத் தடுத்தல், வறட்சியிலிருந்து மீண்டெழும் தன்மையை உருவாக்குவது" என்பதாகும்.

னித இனம் நிலத்தையே நம்பியிருக்கிறது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் நிலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் நிலத்தில் 32 விழுக்காடு சீரழிந்திருக்கிறது என்றும், இந்திய நிலப்பகுதியில் கால் பங்கு பாலைவனமாதலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்றும் இந்திய வனத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. நிலத்தைப் பாதுகாத்தால் மட்டுமே நிலவாழ் உயிரினங்களையும் விவசாயத்தையும் பாதுகாக்க முடியும். காலநிலை மாற்றம், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, மாசுபாடு போன்ற பலதரப்பட்ட பிரச்சனைகள் நிலத்தை பாதிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன. இன்னொருபுறம் காடுகள் அழிக்கப்படுவதால் நிலத்துக்குக் கிடைக்கக்கூடிய பாதுகாப்பும் குறைகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் மையக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் தினத்துக்கான தனது செய்தியை வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், "மாசுபாடு, காலநிலை குழப்பம் மற்றும் பல்லுயிர்ப்பெருக்க இழப்பு ஆகியவற்றால் ஆரோக்கியமான நிலங்கள் பாலைவனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. செழிக்கும் வாழிடங்கள் உயிரற்ற இடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இதனால் பயிர்கள் இறக்கின்றன, நீர் ஆதாரங்கள் மறைகின்றன, பொருளாதாரம் பலவீனமாகிறது, இனக்குழுக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது மறு உருவாக்கத்துக்கான தலைமுறை. அனைவரும் ஒன்றிணைந்து நிலத்துக்கும் மனித இனத்துக்குமான நீடித்த எதிர்காலத்தை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
World Environment Day 2024: நமது கிரகத்தின் நல்வாழ்வு நம் கைகளில்! 
World Environment Day

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், "எல்லாரும் ஒன்றிணைந்து இந்த மையக்கருத்தை செயல்படுத்தப் போராடவேண்டும். நில சீரழிவும் பாலைவனமானதலும் உலக அளவில் மூன்று பில்லியன் மக்களை பாதிக்கக்கூடும். நில சீரழிவால் நன்னீர் வாழிடங்களும் பாதிக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு ஆறு நாடுகள் ஒருங்கிணைந்து ஈரநிலங்களையும் ஆறுகளையும் பாதுகாக்க உறுதியெடுத்துக்கொண்டன. பிப்ரவரி மாதத்தில் நீடித்த நில மேலாண்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நமது நிலம்தான் நமக்கான எதிர்காலம். நாம் நிலத்தைப் பாதுகாக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஐ.நா சபை அதிகாரியான பகோடிர் பர்கனோவ், இந்த மையக்கருத்தை செயல்படுத்துவதற்கான ஐந்து செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறார்:

  • கழிவுகளைக் குறைத்தல், குறிப்பாக நெகிழிப் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்தல்

  • கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல்

  • விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.

  • இயற்கை சீரழிவைத் தடுத்து, காடுகளை மறுசீரமைப்பு செய்தல்

  • இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இந்த சுற்றுச்சூழல் நாளில் இதுபற்றிய செய்திகளை அனைவரிடமும் பகிர்ந்துகொள்வோம்! சூழலைப் பாதுகாப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com